​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
யூ-டியூப்பில் மருத்துவம் - மருத்துவர்கள் எச்சரிக்கை..!

Published : Aug 17, 2019 7:27 AM

யூ-டியூப்பில் மருத்துவம் - மருத்துவர்கள் எச்சரிக்கை..!

Aug 17, 2019 7:27 AM

YouTube-ல் மருத்துவ குறிப்புகளைப் பார்த்து மருந்துகள் எடுத்துக்கொள்வதால், உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு....

இயந்திர மயமான உலகில், நமது உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளவும், உடலில் ஏற்படும் நோய்களுக்கு மருத்துவர்களை நேரில் அணுகி சிகிச்சை பெறவும் பலருக்கு நேரம் இருப்பதில்லை,

மருத்துவரை நேரில் சந்தித்து ஆலோசிக்க நேரமின்மை காரணமாக, பலர் YouTube போன்ற இணையதளங்களில் தங்களுக்கான நோய் குறித்தும், அதற்கான தீர்வு குறித்தும் அதிகமாகத் தேடுகின்றனர், அதில் மருத்துவர்கள் சிலரும் , மருத்துவர்கள் அல்லாது அனுபவத்தின் அடிப்படையில் பலரும் மருத்துவக் குறிப்புகளை வீடியோக்களாக பதிவிடுகின்றனர். குறிப்பாக சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், உடல் எடை குறைப்பு, சிறுநீரகக் கோளாறு, கண்பார்வை பாதிப்பு என அனைத்து விதமான நோய்களுக்கும் மருத்துவ முறைகள் குறித்து அத்தகைய வீடியோவில் விளக்கம் அளிக்கப்படுகிறது.

ஆனால் ஒவ்வொரு நோய்க்கும் அவரவர் உடல் நிலைக்கு ஏற்ப மருந்துகள் மாறுபடும் என்பதால், YouTube வீடியோக்களில் குறிப்பிடும் மருத்துவ முறைகள் அனைவருக்கும் பொருத்தமானதாக இருக்காது என மருத்துவர்கள் விளக்குகின்றனர். சில நேரங்களில் மருத்துவர்களின் நேரடி ஆலோசனை இல்லாமல் வீடியோக்களை பார்த்து மருந்துகள் எடுத்துக்கொள்வதால் உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

சென்னை கிண்டியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் நீரிழிவு நோய் குறித்து மருத்துவ மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கருத்தரங்கம் நடைபெற்றது.

அதில் பங்கேற்றுப் பேசிய நீரிழிவு நோய் மருத்துவர் பன்னீர்செல்வம், நீரிழிவு நோய் குறித்து மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லை என்றும், மாம்பழம், தர்பூசணி, பேரீச்சை, நாட்டுச்சக்கரை, பனைவெல்லம் ஆகியவற்றைத் தொடர்ந்து உட்கொண்டால் சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்றும், பாக்கெட்களில் அடைத்து விற்கப்படும் குளிர்பானங்கள் அதிகமாக உட்கொள்ளுவதை தவிர்த்து மோர், நெல்லிச்சாறு போன்றவற்றைக் குடித்தால் சர்க்கரையை கட்டுப்படுத்தலாம் என்றும் மருத்துவர் பன்னீர்செல்வம் கூறினார்.

சித்தா, யுனானி, அலோபதி என பல்வேறு மருத்துவ முறைகள் இருந்தாலும், மருத்துவரை நேரில் அணுகி அவரவர் உடல்நிலைக்கு ஏற்றார்போல் மருந்து எடுத்துக்கொண்டால் மட்டுமே நோயின் வீரியத்தில் இருந்து முழுமையாக விடிவு பெறமுடியும் என்பதை YouTube மூலம் மருத்துவம் மேற்கொள்பவர்கள் உணர வேண்டும் என்பதே மருத்துவர்களின் கருத்தாக உள்ளது...