அமெரிக்காவில் நுரையீரல் சார்ந்த நோய்களால் மக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வரும் சூழலில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை புகைத்தல் காரணமாக அவர்கள் பாதிப்புக்கு ஆளாகி இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா, இல்லினாய்ஸ், இண்டியானா, ஐயொவா, மிச்சிகன், மின்னசோட்டா, ஓஹியோ மற்றும் விஸ்கான்சின் ஆகிய 8 மாகாணங்களில் கடந்த சில வாரங்களாக சுவாசக் கோளறு, மூச்சு விடுதலில் சிரமம், தொடர் இருமல், மயக்கம் போன்ற பல்வேறு அறிகுறிகளுடன் இளைஞர்கள் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது அதிகரித்துள்ளது.
அவர்களில் சிலருக்கு நுரையீரலில் ரத்தம் வருமளவு பாதிப்பு ஏற்பட்டு, உயிர்காக்கும் கருவிகளின் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். பலருக்கு நுரையீரலில் எரிச்சல் மற்றும் சேதத்தை ஏற்படுத்தும் விஷத்தன்மையை அகற்ற சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்கள் அனைவரும் நிகோடின் அல்லது கஞ்சா அல்லது இரண்டும் புகைக்கும் வழக்கம் உள்ளவர்கள் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், பாதிக்கப்பட்ட மாகாணங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இளைஞர்களை புகைப்பிடித்தலில் இருந்து கட்டுப்படுத்துவது கடினம் என்ற போதும், விஷத்தன்மை மிக்க பொருளை தொடர்ந்து புகைத்தால் இளைஞர்களின் நலன் கேள்விக்குறியாகும் என மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.