​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இடம் மாறுகிறது லடாக் சூரிய மின்னுற்பத்தி நிலையம்?

Published : Aug 16, 2019 11:19 AM



இடம் மாறுகிறது லடாக் சூரிய மின்னுற்பத்தி நிலையம்?

Aug 16, 2019 11:19 AM

லடாக்கில் 45 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள சூரிய மின்னுற்பத்தி திட்டம், வனஉயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தலாம் என கவலை எழுப்பப்பட்டுள்ளதால் அருகில் வேறொரு இடத்திற்கு மாற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு ரத்து பற்றி ஆகஸ்ட் 8ஆம் தேதி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர், சூரிய மின்னாற்றல் திட்டங்கள் லடாக் பகுதியின் வளர்ச்சிக்கு உதவும் என்று கூறியிருந்தார். அந்த வகையில், ஜம்மு-காஷ்மீரில் இருந்து பிரித்து அமைக்கப்பட்டுள்ள புதிய யூனியன் பிரதேசமான லடாக்கில், 45 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 7 ஆயிரத்து 500 மெகாவாட் சூரிய மின்னுற்பத்தி திட்டம் அமைய உள்ளது.

லே மாவட்ட தலைநகரில் இருந்து 254 கிலோமீட்டர் தொலைவில், நியோமா பகுதியில் உள்ள ஹன்லே-ஹல்டோ Hanle-Khaldo என்ற கிராமத்தில் 5 ஆயிரம் மெகாவாட் சூரிய மின்னுற்பத்தி நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல கார்கில் மாவட்ட தலைநகரில் இருந்து 254 கிலோமீட்டர் தொலைவில் சன்ஸ்கர் தாலுகாவில் சுரு பகுதியில் 2 ஆயிரத்து 500 மெகாவாட் சூரியமின்னுற்பத்தி நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டங்களால், சூரிய மின்தகடுகளை துப்புரவு செய்வது, மின்தடம் மற்றும் மின்மாற்றிகளை பராமரிப்பது போன்ற வேலைகள் உள்ளூர் மக்களுக்கு கிடைத்து அவர்களது வளர்ச்சிக்கு வழிவகுக்கும். மேலும் இந்த 7ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரத்தை தற்போது ஜென்செட்டுகள் மூலமே பெற வேண்டியுள்ளது. இப்படி ஜென்செட்டுகளை பயன்படுத்துவதால், ஆண்டுக்கு 12 ஆயிரத்து 700 டன் அளவுக்கு கார்பன் உமிழ்வு வெளியேற்றப்பட்டு சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. சூரிய மின்னுற்பத்தி நிலையம் அமைவது, இந்த கார்பன் உமிழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.

இந்நிலையில், ஹன்லே-ஹல்டோ கிராமம், பாதுகாக்கப்பட்ட வனஉயிரினங்களின் இனப்பெருக்க பகுதியில் வருவதால், சூரியமின்னுற்பத்தி நிலையம் அமைப்பது போன்ற நடவடிக்கைகளால் வனஉயிரின பெருக்கத்திற்கு பாதிப்பு ஏற்படலாம் என கவலை எழுப்பப்பட்டுள்ளது.

சூரியமின்னுற்பத்தி நிலையத்திற்கு இடம் கொடுப்பதை முன்னுதாரணமாகக் காட்டி, துப்பாக்கி சுடும் பயிற்சிக்கும் இடம்தருமாறு பாதுகாப்பு படையினர் கேட்பது, வனஉயிரினங்கள் துறையை தர்மசங்கடத்திற்கு ஆளாக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, 5 ஆயிரம் மெகாவாட் சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை, லே நகரில் இருந்து 185 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மோரி பீடபூமிப் பகுதிக்கு மாற்றுமாறு, இந்திய சூரிய எரிசக்தி கழகத்தை வனஉயிரினங்கள் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

புதிதாக பரிந்துரைக்கப்பட்டுள்ள இடம் லே-மணாலி நெடுஞ்சாலை அருகே அமைந்திருப்பது கருவிகள், ஆட்களை கொண்டுசெல்ல வசதி என்றாலும், சாலை செல்லும் இரு கணவாய்களில் குளிர்காலத்தில் 6 மாதங்களுக்கு பனிமூடிக் கிடக்கும். 6 முதல் 8 மாதங்களுக்கு சாலைவழிப் போக்குவரத்து துண்டிக்கப்படும் நிலையில், சூரிய மின்னுற்பத்தி நிலைய பராமரிப்பு கடினமானதாகி விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.