​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வேலூர் வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் தீவிரம்..!

Published : Aug 08, 2019 7:10 PM

வேலூர் வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் தீவிரம்..!

Aug 08, 2019 7:10 PM

வேலூர் தொகுதி மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுவதை முன்னிட்டு, அங்கு முன்னேற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன. வாக்கு எண்ணும் மையத்திற்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, 2,100 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதிமுக கூட்டணி சார்பில், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், திமுக சார்பில் கதிர் ஆனந்த் உள்ளிட்ட 28 வேட்பாளர்கள் போட்டியிட்ட வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல், கடந்த ஐந்தாம் தேதி நடைபெற்றது. இதில், 72 சதவீதம் பேர் வாக்களித்தனர்.

ஆயிரத்து 553 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்த உடன், வாக்கு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன், வாக்குகள் எண்ணும் மையமான வாலாஜாபேட்டையில் உள்ள ராணிப்பேட்டை பொறியியல் மற்றும் கலைக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.

வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு அங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துணை ராணுவத்தினர் 75 பேர், சிறப்பு போலீசார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பர்வேஸ் குமார் தலைமையில், 2 ஏடிஎஸ்பிக்கள், 6 டிஎஸ்பிக்கள் என 2 ஆயிரத்து 100 பேர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணும் மையத்திற்கு மூன்றடுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

குடியாத்தம், அணைக்கட்டு, வேலூர், கேவி குப்பம், வாணியம்பாடி, ஆம்பூர் என 6 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒப்புகைச் சீட்டுகள் எண்ணிக்கைக்கென 7 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்திலும் 14 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு கட்சிக்கு தலா 15 முகவர்கள் உள்ளே அனுமதிக்கப்படுவர்.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த அம்மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான சண்முக சுந்தரம், 6 தொகுதிகளுக்கும் ஒவ்வொரு சுற்றாக வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த பின்னரே அடுத்த சுற்று தொடங்கும் என்று தெரிவித்தார். வாக்கு எண்ணிக்கை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேர்தல் ஆணையத்தில் வெளியாகும் என்றும் அவர் கூறினார். வாக்கு மையங்களுக்கு செல்போன்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 

வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த உடன், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஐந்து வாக்கு எந்திரங்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு, ஒப்புகைச் சீட்டுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படும்.