​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரெப்போ மதிப்பை 35 அடிப்படை புள்ளிகள் குறைத்து ரிசர்வ் வங்கி உத்தரவு

Published : Aug 07, 2019 11:51 AM

ரெப்போ மதிப்பை 35 அடிப்படை புள்ளிகள் குறைத்து ரிசர்வ் வங்கி உத்தரவு

Aug 07, 2019 11:51 AM

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை குறைத்து, ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன்மூலம், வீட்டுக்கடன், வாகன கடன் உள்ளிட்டவற்றின் வட்டிவிகிதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

2019-2020ஆம் நிதியாண்டின், மூன்றாவது காலாண்டிற்கான நிதி கொள்கையை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுதொடர்பான மூன்று நாள் ஆலோசனை கூட்டம், மும்பையில், இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தலைமையில் நடைபெற்ற நிலையில், இன்றுடன் அக்கூட்டம் முடிவடைந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது, வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம், 35 அடிப்படை புள்ளிகள் என்ற அடிப்படையில், குறைக்கப்படுவதாக அவர் அறிவித்தார்.

இதன்மூலம், ரெப்போட் வட்டி விகிதம் 5 புள்ளி 75 விழுக்காடாக இருந்த நிலையில், 5 புள்ளி 40 விழுக்காடாக குறைந்துள்ளது. இதுதவிர ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம், 5 புள்ளி 50 விழுக்காட்டிலிருந்து, 5 புள்ளி 15 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, நடப்பு நிதியாண்டின், GDP எனப்படும், மொத்த உள்நாட்டு உற்பத்தி இலக்கு, 7 விழுக்காட்டிலிருந்து, 6 புள்ளி 9 சதவிகிதமாக குறைத்து, ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது.

கடந்த 2014ஆம் ஆண்டில், ரெப்போ வட்டி விகிதம் 8 விழுக்காடு அளவிற்கு இருந்தது. இதையடுத்து, ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய அரசு மேற்கொண்ட நிதியாள்கை நடவடிக்கைகளால், படிப்படியாக, 2 புள்ளி 60 விழுக்காடு அளவிற்கு ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டு, தற்போது, 5 புள்ளி 40 விழுக்காடு என்ற அளவில் குறைந்துள்ளது.

உற்பத்தி, சுரங்கங்கள் துறைகளில் வீழ்ச்சியால், கடந்த மே மாதம் தொழில்துறை வளர்ச்சி சற்று குறைந்திருப்பதாகவும், ஆனால் அதே நேரத்தில், நாட்டின் மின்துறை நல்ல முன்னேற்றம் கண்டிருப்பதாகவும், ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை, ரிசர்வ் வங்கி மேலும் குறைந்து அறிவித்திருப்பதால், வீட்டு கடன், வாகன கடன் உள்ளிட்டவற்றிற்கான வட்டி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆன்லைன் மூலமாகவோ, வங்கிகள் மூலமாகவோ, பணத்தை அனுப்ப வல்ல, NEFT எனப்படும் தேசிய மின்னணு நிதி பறிமாற்றம் முறை மூலம், வருடம் டிசம்பர் முதல் 24 மணி நேரமும் பணத்தை அனுப்பலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. தற்போது, NEFT முறை மூலம், வங்கி வேலைநாட்களில், அதுவும், காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரையில், நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும் என்ற கட்டுப்பாடு உள்ளது.

இந்த கட்டுப்பாட்டை நீக்க ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளது. இதன்படி, வருகிற டிசம்பர் மாதம் முதல், NEFT மூலம், அனைத்து நாட்களிலும், 24 மணி நேரமும் பணம் அனுப்பலாம் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.