​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாநகரப் பேருந்தில் மாணவர்கள் மோதிய சம்பவத்தில் ஒரு மாணவருக்கு ஜாமின்..!

Published : Aug 01, 2019 7:19 PM

மாநகரப் பேருந்தில் மாணவர்கள் மோதிய சம்பவத்தில் ஒரு மாணவருக்கு ஜாமின்..!

Aug 01, 2019 7:19 PM

சென்னை அரும்பாக்கத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பட்டாக் கத்திகளுடன் மோதிக் கொண்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் ஒருவர், சம்பவத்தன்று அந்த இடத்திலேயே இல்லை என்பதற்கான ஆதாரம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதால் அவருக்கு எழும்பூர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

சென்னை அரும்பாக்கத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், ரூட்டு தல பிரச்சனையில் பட்டாக் கத்திகளுடன் மோதிக் கொண்டனர். கடந்த 23ஆம் தேதி மாநகரப் பேருந்தில் நடைபெற்ற மோதலால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இதில் ஒரு மாணவருக்கு வெட்டு விழுந்தது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட அரும்பாக்கம் போலீசார், பெரியபாளையத்தைச் சேர்ந்த மதன் உள்ளிட்ட 6 மாணவர்களைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மதன் உள்ளிட்ட இருவர் தப்பி ஓட முயன்ற போது கீழே விழுந்து கை முறிந்ததாக போலீசார் விளக்கம் அளித்திருந்தனர். இந்த நிலையில், மதனுக்கு ஜாமின் கேட்டு அவர் தரப்பில் எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணையின் போது, பேருந்து மோதல் சம்பவம் நடந்த சமயத்தில் மதன் பெரியபாளையத்தில் இருந்ததற்கான சிசிடிவி ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் மதனுக்கு நீதிபதி ஜாமின் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மதனின் தாய் மற்றும் வழக்கறிஞர் ஆகியோர், 2 மணிக்கு மோதல் சம்பவம் நடந்ததாகவும், 1.17 மணிக்கு மதன் பெரியபாளையத்தில் இருந்ததாகவும் கூறினர். மேலும் 2 மாதமாக மதன் கல்லூரிக்குச் செல்லவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள போலீசார், மோதலில் வெட்டுப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மாணவரின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே மதன் கைது செய்யப்பட்டதாகக் கூறியுள்ளனர். இதுதொடர்பாக தீர விசாரிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.