​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அத்திவரதர் வைபவத்தின் 30ம் நாளான இன்று, இளம் நீல நிற பட்டாடையில் காட்சி அளிக்கிறார்

Published : Jul 30, 2019 11:35 AM



அத்திவரதர் வைபவத்தின் 30ம் நாளான இன்று, இளம் நீல நிற பட்டாடையில் காட்சி அளிக்கிறார்

Jul 30, 2019 11:35 AM

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவத்தின் 30ம் நாளான இன்று, இளம் நீல நிற பட்டாடையில், செண்பகப்பூ மற்றும் மல்லிகைப்பூ மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு தரிசனம் அளித்து வருகிறார்.

சயன கோலத்தில் தரிசனம் அளிப்பது , நாளையுடன் நிறைவடைவதால், பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதிகாலை, நான்கு முப்பது மணிக்கு நடை திறக்கப்பட்டதும், அங்கு காத்திருந்த பக்தர்கள், ஒரு மணி நேரத்தில் தரிசனம் செய்ததாக தெரிவித்தனர். தொடர்ந்து 60 ஆயிரம் பக்தர்கள் காத்திருக்கிறார்கள்.

நாளை மறுநாள் ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிக்க உள்ளதால், நாளை மதியம் 12 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, கோவிலுக்கு உள்ளே வந்தவர்கள், மாலை 5 மணி வரை மட்டுமே தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வி.வி.ஐ.பி. பாஸ் வைத்துள்ளவர்கள் மாலை 3 மணிக்கு மேல் தரிசனம் செய்ய அனுமதியில்லை என்றும், டோனர் பாஸ், வி.ஐ.பி. பாஸ் வைத்துள்ளவர்கள் மதியம் 12 மணி வரையிலும், ஆன்லைன் மூலம் டிக்கெட் வாங்கியவர்கள் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

வரும் 3 ம் தேதி ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளதால், அன்று மதியம் 3 மணிக்கு, நடை அடைக்கப்பட்டு, திருக்கல்யாணம் முடிந்த பின்னர் இரவு 8 மணியில் இருந்து நள்ளிரவு வரை தரிசிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தரிசனத்துக்கு வந்த, வெளியூர் பக்தர்களின் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள், நகரின் குறுகிய சாலைகளில், ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் வெளியே சென்ற பிறகுதான், நகருக்குள் மேலும் வெளியூர் வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்று கூறிய போலீசார், நகரின் எல்லையிலேயே, தடுத்து நிறுத்தி வைத்துள்ளனர். அதில் வந்த பக்தர்கள் மினி பேருந்துகளில், சாமி தரிசனம் செய்ய அனுப்பி வைக்கப்பட்டனர்.