​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
Cafe Coffee Day நிறுவனர் வி.ஜி.சித்தார்தா மாயம்

Published : Jul 30, 2019 11:03 AM



Cafe Coffee Day நிறுவனர் வி.ஜி.சித்தார்தா மாயம்

Jul 30, 2019 11:03 AM

ஆண்டுக்கு 28 ஆயிரம் டன் காஃபி ஏற்றுமதி, உள்நாட்டில் 2 ஆயிரம் டன் காஃபி விற்பனை, 7 நாடுகளில் கிளைபரப்பியுள்ள Cafe Coffee Day அங்காடிகள் என பெரும் தொழில்சாம்ராஜ்யத்தை கட்டியமைத்த கர்நாடக தொழிலதிபர் வி.ஜி.சித்தார்தா திடீரென மாயமாகியுள்ளார்.

தொழில்முனைவோராக தோல்வியடைந்துவிட்டதாகவும், தாங்க முடியாத கடன் பிரச்சனைகளில் சிக்கியுள்ளதாகவும் அவர் கடிதம் எழுதியிருப்பதால் விபரீதமான முடிவை எடுத்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. காஃபி தொழிலதிபரின் கசப்பான முடிவு குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் காஃபி அங்காடி கிளைகள் வைத்துள்ள அமெரிக்காவின் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கு போட்டியாளராக கருதப்படும் நிறுவனம் Coffee Day Enterprises.

சென்னை உட்பட இந்தியா முழுவதும் Cafe Coffee Day என்ற பெயரில் சங்கிலித் தொடர் அங்காடிகளை நடத்தி வருகிறது. 1996ஆம் ஆண்டில் பெங்களூரில், பிரிகேட் சாலையில் முதல் Cafe Coffee Day கிளையைத் தொடங்கிய இந்நிறுவனத்திற்கு இந்தியாவில் ஆயிரத்து 722 கிளைகள் உள்ளன. இதுதவிர ஆஸ்திரியா, செக் குடியரசு, மலேசியா, எகிப்து, நேபாளம் ஆகிய நாடுகளிலும் Cafe Coffee Day கிளைகள் உள்ளன.

பெரும் புகழுடன், பன்னாட்டு நிறுவனமாக ஆலமரம்போல கிளை பரப்பி இந்நிறுவனத்திற்கு விதைபோட்டவர் வி.ஜி.சித்தார்தா. கர்நாடகத்தின் சிக்மகளூர் மாவட்டத்தில் பிறந்த வி.ஜி.சித்தார்தாவின் குடும்பத்திற்கு காஃபி தோட்டங்கள் உள்ளன. 58 வயதான, பொருளாதாரத்தில் முதுகலை பட்டம்பெற்ற முதல் தலைமுறை தொழில்முனைவோரான வி.ஜி.சித்தார்தாவுக்கு சுமார் 15 ஆயிரம் ஏக்கர் அளவில் காஃபி தோட்டங்கள் உள்ளன.

வெளிநாடுகளுக்கு காஃபி ஏற்றுமதி, உள்நாட்டில் காஃபி விற்பனை என காஃபித் தொழிலில் மட்டுமின்றி, தொழில்நுட்பத்துறையிலும் கால்பதித்தார். குளோபல் டெக்னாலஜி வெஞ்சர் என்ற நிறுவனத்தையும் தொடங்கினார்.

வேறு பல நிறுவனங்களிலும் பெரும் பங்குகளை வைத்துள்ளார். கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மகளை திருமணம் செய்துள்ள இவருக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.

வரி ஏய்ப்பு புகாரில், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில், 2017ஆம் ஆண்டில் சித்தார்தாவுக்கு சொந்தமான 20 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. இந்த பிரச்சனைக்குப் பிறகே சித்தார்தாவின் சரிவு தொடங்கியதாக சொல்லப்படுகிறது.