​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தேசிய அணைகள் பாதுகாப்பு மசோதா மக்களவையில் தாக்கல்

Published : Jul 29, 2019 5:38 PM



தேசிய அணைகள் பாதுகாப்பு மசோதா மக்களவையில் தாக்கல்

Jul 29, 2019 5:38 PM

தேசிய அணைகள் பாதுகாப்பு மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாநிலங்களின் உரிமையை பறிக்கும் வகையில் மசோதா இருப்பதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. 

நாடு முழுவதும் உள்ள அனைத்து அணைகளையும் ஒன்று போல பாரமரித்து, பாதுகாப்பதற்கான மசோதாவை மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்து உள்ளது. தேசிய அணைகள் பாதுகாப்பு மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்த ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத், நாட்டில் உள்ள 92 சதவிகித அணைகள், இரு மாநிலங்களுக்கு இடையே பாயும் ஆறுகளில் தான் கட்டுப்பட்டுள்ளன என்றார்.

இதனால் அணைகளை பாதுகாப்பதில் ஏற்படும் சிக்கல்களை களைய தேசிய அணைகள் பாதுகாப்பு மசோதா உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.அணைகளை பராமரிப்பதில்  மத்திய அரசின் பங்கு முக்கியம் என்ற அவர், மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை’’என்றார்.

ஆனால் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. காங்கிரஸ் எம்.பி.க்களான ஆதிரஞ்சன் சவுத்திரி, சசிதரூர், கேரளாவைச் சேர்ந்த புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி எம்.பி. பிரேம சந்திரன், திமுக உறுப்பினர் ஆ.ராசா உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.  ‘‘இந்த மசோதாவில் எதுவும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை என்றும், அணைகளுக்கான தேசிய ஆணையத்தில் யார் யார் பங்குதாரர் என்ற விவரம் கூட இடம் பெறவில்லை’’ என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறினர்.

நீர், நிலம் போன்றவை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் வரும் நிலையில், மாநில அரசுகளை கலந்து ஆலோசிக்காமல் மசோதவை கொண்டு வந்துள்ளதாக கூறிய எதிர்க்கட்சி உறுப்பினர்கள்,  மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றனர்.

தேசிய அணைகள் பாதுகாப்பு மசோதவின் படி , நாட்டில் உள்ள அணைகளை பாதுகாக்க தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையமும், தேசிய அணைகள் பாதுகாப்பு குழுவும் அமைக்கப்படும். பாதுகாப்பு குழு, அணைகளின் பாதுகாப்புக்கான கொள்கைகளை உருவாக்கும், தேவையான பரிந்துரைகளை அவ்வப்போது வழங்கும். பாதுகாப்பு குழு உருவாக்கிய அணைகள் பாதுகாப்பிற்கான கொள்கை, வழிகாட்டு நெறிமுறைகள், தரமேம்பாடு உள்ளிட்டவற்றை ஆணையம் செயல்படுத்தும்.

மேலும் மாநில அரசுகளும் அணைகள் பாதுகாப்பிற்கான குழுக்களை அமைக்க வேண்டும். மாநில அரசின் குழுக்கள், மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு ஆணையத்துடன் இணைந்து செயல்படும் என்றும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது.  மேலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் அணைகளை பார்வையிட்டு ஆய்வு செய்வது, அவசரகால திட்டங்கள் வகுப்பது, பாரமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிக்காக நிதியை பராமரிப்பது, பாதுகாப்பு நெறிமுறைகளை வகுப்பது உள்ளிட்டவற்றையும், தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் மேற்கொள்ளும் என மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

ஒரு மாநிலத்திற்கு சொந்தமான அணை, வேறு ஒரு மாநிலத்தில் இருந்தால், அந்த அணையை பாதுகாத்து, பராமரிக்கும் உரிமையை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையமே தனது வசம் ஏற்கும் என்றும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்குச் சொந்தமான முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், துன்னகடவு, பெருவாரிப்பள்ளம் ஆகிய நான்கு அணைகள் கேரளாவில் உள்ளன.

மாநிலங்களுக்கு இடையிலான ஒப்பந்தங்களின் அடிப்படையில் இந்த நான்கு அணைகளையும் தமிழ்நாடு அரசு தான் நிர்வகித்துப் பராமரித்து வருகிறது. மத்திய அரசு கொண்டுவரும் இந்தப் புதிய மசோதா, தமிழகத்துக்குச் சொந்தமான 4 அணைகளையும் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள வழிவகுக்கும். இதனால் இந்த மசோதாவுக்கு தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுகுறித்து பிரதமர் மோடிக்கு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.