​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கழிவுநீரைப் பயன்படுத்தி விவசாயம் - வேதனையில் விவசாயிகள்

Published : Jul 28, 2019 6:14 PM

கழிவுநீரைப் பயன்படுத்தி விவசாயம் - வேதனையில் விவசாயிகள்

Jul 28, 2019 6:14 PM

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கழிவுநீரை பயன்படுத்தி விவசாயம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.  

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, பாலக்கோம்பை, மொட்டனூத்து, ஒக்கரைப்பட்டி, வெங்கடாசலபுரம், ஜங்கால்பட்டி, நாகலாபுரம், ஸ்ரீரெங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மானாவரி மற்றும் இறவை பாசனத்தின் மூலம் சாகுபடி நடைபெறுகிறது. பருத்தி, கடலை, வெண்டை, வெங்காயம், தக்காளி, கத்திரி உள்ளிட்ட பயிர்கள் அப்பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகின்றன.

கடந்த சில ஆண்டுகளாகவே பருவமழை பொய்த்துப் போனதால் இப்பகுதி விவசாயிகள், தங்களது நிலங்களை தரிசாக்கிவிட்டு வேறு வேலைக்குச் சென்றுவிட்டனர். ஆனாலும் சிலர் மட்டும் இழப்புகள் ஏற்பட்டாலும் பரவாயில்லை என விவசாயம் செய்து வருகின்றனர்.

மழையை நம்பியும், ஆழ்துளை கிணறுகள் அமைத்தும் கிடைக்கும் சொற்ப நீரில் விவசாயம் செய்து வரும் அவர்கள், அந்தத் தண்ணீருக்கும் பற்றாக்குறை ஏற்படும் நேரத்தில் குடியிருப்புகள் மற்றும் கால்நடை கொட்டகைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை பயன்படுத்துவதாகக் கூறுகின்றனர். தண்ணீர் பற்றாக்குறையானது பயிர்களில் பல்வேறு நோய்த்தாக்குதல்களை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

குடியிருப்புகள் மற்றும் கால்நடை கொட்டகைகளில் இருந்து வாய்க்கால் மூலம் வரும் கழிவுநீர் பெரிய அளவிலான பள்ளத்தில் சேமிக்கப்படுகிறது. இந்த பள்ளத்தில் இருந்து மின் மோட்டார் மூலம் தண்ணீரை வயல்வெளிகளுக்கு விவசாயிகள் கொண்டு செல்கின்றனர்.

நோய்த்தாக்குதல்களுக்கு உள்ளான பயிர்களை நேரில் வந்து பார்வையிட்டு வேளாண் துறை அதிகாரிகள் ஆலோசனைகள் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

விதை விதைத்தல், களையெடுத்தல், மருந்தடித்தல், உரமிடுதல் என கடன் வாங்கி பயிரிட்டு அவற்றுக்கு உயிரூட்ட போதிய நீர் இல்லாமல் தவிக்கும் விவசாயிகள், பருவ மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.