​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சவுதி மன்னர் மாளிகை அருகே பறந்த ஆளில்லா விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது - ஆட்சியைக் கவிழ்க்க சதியா என விசாரணை

Published : Apr 22, 2018 1:18 PM



சவுதி மன்னர் மாளிகை அருகே பறந்த ஆளில்லா விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டது - ஆட்சியைக் கவிழ்க்க சதியா என விசாரணை

Apr 22, 2018 1:18 PM

சவுதி அரேபியாவில் அரச குடும்ப வசிக்கும் அரண்மனை அருகே சிறிய ரக ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு இருப்பதுடன், இளவரசர் சல்மான் பதுங்கி இருப்பதாகக் கூறப்படுவதால் ஆட்சிக் கவிழ்ப்பு சதியாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

ரியாத்தின் அல் - குஸாமா மாவட்டத்தில், பட்டத்து இளவரசர் அரண்மனை அமைந்துள்ள இடத்தில் தொடர்ந்து துப்பாக்கி குண்டுகள் முழங்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி இருந்தன. 

இந்தக் காட்சிகள் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்த நிலையில், இதுதொடர்பாக விளக்கம் அளித்த காவல்துறை அதிகாரிகள், நேற்றிரவு 7.50 மணி அளவில் ஆளில்லா விமானம் ஒன்று அரண்மனை அருகே பறந்ததாகவும் அதை சுட்டு வீழ்த்தியதாகவும் தெரிவித்தனர்.

இந்த விமானமானது ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்பட்டது என்று கூறிய அவர்கள், இதை இயக்கியவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர். ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட போது பட்டத்து இளவரசர் சல்மான், அரண்மனையில் இல்லை என்றும் திரியாவில் உள்ள பண்ணை மாளிகையில் இருந்ததாகவும் அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கின்றது. ஆனால் அவர் சவுதியின் வடகிழக்கே உள்ள மன்னர் காலித் ராணுவ நகர் சென்று விட்டதாகவும், அங்கு பதுங்கு குழியில் மறைந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சவுதியில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளதா? என்று சந்தேகங்கள் எழுப்பப்படும் நிலையில், ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கை ஏதும் நடைபெறவில்லை என அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், ஆட்சிப்பொறுப்பை கையில் எடுத்துக் கொண்ட பின்னர் ஊழலுக்கு எதிரான பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். உறவினர்கள், நண்பர்கள் என அரச குடும்பத்தினரை, ஹோட்டலில் சிறைபிடித்ததோடு, ஊழல் சொத்துகளின் ஒரு பகுதியை அரசுக்கு எழுதி வைக்க நிர்பந்தித்ததும் குறிப்பிடத்தக்கது.