​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பேராசிரியை நிர்மலா தேவி வீட்டுக்கு சீல்வைப்பு - CBCID போலீசார் சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

Published : Apr 22, 2018 11:21 AM



பேராசிரியை நிர்மலா தேவி வீட்டுக்கு சீல்வைப்பு - CBCID போலீசார் சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

Apr 22, 2018 11:21 AM

பேராசிரியர் நிர்மலா தேவியின் வீட்டில் சோதனை நடத்திய சிபிசிஐடி போலீசார், முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியதுடன், வீட்டிற்கும் சீல் வைத்திருக்கின்றனர். 

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவியை 5 நாட்கள் காவலில் எடுத்துள்ள சிபிசிஐடி போலீசார், இரண்டாவது நாளாக நேற்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், முனைவர் படிப்பு படித்து வந்த கருப்பசாமி, பல்கலைக்கழக அதிகாரி முருகன் ஆகியோர் மாணவிகளை தவறான பாதைக்கு அழைக்க உடந்தையாக இருந்ததாக நிர்மலா தேவி தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. திட்டமிட்டுள்ளது.

இதனிடையே, அருப்புக்கோட்டை ஆத்திப்பட்டி காவியன்நகரில் உள்ள நிர்மலா தேவியின் வீட்டில் 2 குழுவினர் சோதனை நடத்தினர்... ஆத்திப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில், நிர்மலா தேவியின் சகோதரர் ரவி என்பவரை உடன் வைத்துக் கொண்டு ஆறரை மணி நேரம் இந்த சோதனை நடைபெற்றது. சோதனையின்போது முக்கிய ஆவணங்கள், சிடிக்கள், புகைப்படங்கள், பென் டிரைவ்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், நிர்மலா தேவியின் வீட்டிற்கும் சீல்வைக்கப்பட்டது.

முன்னதாக, தேவாங்கர் கலைக் கல்லூரியின் முன்னாள் செயலாளர் சவுண்டையா, விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டு விசாரிக்கப்பட்டார். இவர் 2008ம் ஆண்டு பேராசிரியை நிர்மலா தேவி அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரியில் பணியில் சேர்ந்த போது கல்லூரிச் செயலாளராக இருந்தவர் ஆவார். இவரைத் தொடர்ந்து, நிர்மலா தேவி மாமனார் பாண்டியன் விசாரணைக்காக ஆஜரானார். 

தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என நிர்மலா தரப்பில் கூறப்பட்டதையடுத்து விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் விசாரணை மேற்கொண்ட விசாரணை அதிகாரி சந்தானம் குழு முன் பேராசிரியர்கள், பல்கலைக்கழக அதிகாரிகள் உள்ளிட்ட 14 பேர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சந்தானம், வரும் புதன் அல்லது வியாழக்கிழமை நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்தப்படும் என்றார். சிபிசிஐடி போலீசார் விசாரிக்கும்போது, தாமும் நேரில் சென்று, நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்தப்போதாவும் விசாரணை அதிகாரி சந்தானம் தெரிவித்திருக்கிறார். 

நிர்மலாதேவி விவகாரத்தில் விசாரணை சூடுபிடித்துள்ள நிலையில், அந்த ஆடியோ உரையாடலில் இடம்பெற்றுள்ளவற்றுக்கும், காமராஜர் பல்கலைக் கழகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என துணை வேந்தர் செல்லத்துரை விளக்கமளித்துள்ளார்.