​​ நீரவ் மோடி முறைகேடு விவகாரத்தில் மும்பை பஞ்சாப் நேசனல் வங்கிக்கிளைக்கு சீல் வைப்பு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீரவ் மோடி முறைகேடு விவகாரத்தில் மும்பை பஞ்சாப் நேசனல் வங்கிக்கிளைக்கு சீல் வைப்பு

நீரவ் மோடி முறைகேடு விவகாரத்தில் மும்பை பஞ்சாப் நேசனல் வங்கிக்கிளைக்கு சீல் வைப்பு

Feb 19, 2018 6:33 PM

ப்ராடி ஹவுஸ் கிளைக்கு சிபிஐ சீல் வைத்தது. இந்த வழக்கில் 200 போலி நிறுவனங்கள் மற்றும் பினாமி சொத்துகள் மீது அமலாக்கத்துறையின் பார்வை திரும்பியுள்ளது.

இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் உள்ள சில அலுவலர்களை சிறப்பாக கவனித்து, அதன் மூலம் பெற்ற உத்தரவாத கடிதத்தால் 11 ஆயிரத்து 400 கோடி ரூபாய் கடன் பெற்ற நீரவ் மோடி, ஜனவரி ஒன்றாம் தேதி நாட்டை விட்டு தப்பி ஓடினார். இதுதொடர்பாக அந்த வங்கியின் மும்பை அலுவலக கிளை அலுவலர் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்த சிபிஐ, 3 பேரை கைது செய்தது.

இதை அடுத்து நீரவ் மோடிக்கு சொந்தமாக நாடு முழுவதும் உள்ள 73 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி 5 ஆயிரத்து 674 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்தது. வங்கியில் மோசடி செய்து குவித்த பணம், போலி நிறுவனங்கள் மற்றும் பினாமிகள் மூலம் கையாளப்பட்டு இருக்கலாம் என்று அமலாக்கத்துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. எனவே நீரவ் மோடி மற்றும் அவரது தொழில் பங்குதாரர் மெகுல் சோக்சி ஆகியோருக்கு தொடர்புடைய 200 போலி நிறுவனங்கள் மற்றும் பினாமி சொத்துகள் குறித்து அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதனிடையே முறைகேடு வழக்கில் தொடர்புடைய பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பையில் உள்ள ப்ராடி ஹவுஸ் கிளைக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று சீல் வைத்தனர். அனுமதியின்றி யாரும் உள்ளே நுழையக் கூடாது என்று கிளை அலுவலக வாயிலில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.