​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தலைக் கவசத்துடன் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை கொலை..! மாணவர்கள் அதிர்ச்சி

Published : Jul 22, 2019 6:39 PM



தலைக் கவசத்துடன் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை கொலை..! மாணவர்கள் அதிர்ச்சி

Jul 22, 2019 6:39 PM

மதுரை திருமங்கலத்தில் தலைக்கவசம் அணிந்து கொண்டு தனியார் பள்ளி வகுப்றைக்குள் புகுந்த பொறியாளர், தனது மனைவியான ஆசிரியையை மாணவர்களின் கண்முன்னே கத்தியால் குத்திக் கொடூரமாக கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ராம்நாடு பகுதியைச் சேர்ந்த குருமுனீஸ்வரனுக்கும் காரியாப்பட்டியைச் சேர்ந்த ரதிதேவிக்கும் திருமணமாகி இரட்டைக் குழந்தைகள் உள்ளன. கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவதும் பின்னர் உறவினர்கள் பேசி சேர்த்து வைப்பதும் அரங்கேறி வந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் வழக்கம்போல் சண்டையிட்டுக் கொண்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். குருமுனீஸ்வரன் சென்னையில் கட்டிடப் பொறியாளராகப் பணியாற்றி வரும் நிலையில், ரதிதேவி மதுரை திருமங்கலம் பி.கே.என் நாடார் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார். குழந்தைகள் இரண்டும் ரதிதேவியுடனேயே இருந்த நிலையில், ஏற்கனவே மனைவி மீது கோபத்தில் இருந்த குருமுனீஸ்வரனிடம் நண்பர்கள் சிலர் அவரது நடத்தை குறித்து தவறான தகவல்களை அளித்ததாகக் கூறப்படுகிறது.

இதில் மேலும் ஆத்திரமடைந்த குருமுனீஸ்வரன், ரதிதேவி வேலை செய்யும் பள்ளிக்கு கத்தி மற்றும் திருப்புளி இரண்டையும் தலைக்கவசத்தில் மறைத்து வைத்து எடுத்துச் சென்றுள்ளான். பள்ளியின் மூன்றாவது மாடியில் ரதிதேவி மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருக்க, அங்கு சென்ற குருமுனீஸ்வரன் பிள்ளைகளைப் பார்த்து “ இப்போது உங்கள் ஆசிரியைக் குத்திக் கொலை செய்யப்போகிறேன். எல்லோரும் பாருங்கள்” என்று கூறியவாறே சரமாரியாக கத்தியால் வெட்டியும் திருப்புளியால் குத்தியும் கொடூரமாகக் கொலை செய்துள்ளான். இதனை எதிர்பாராத மாணவர்கள், அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்துள்ளனர்.

ரதிதேவி வகுப்பறையிலேயே ரத்தவெள்ளத்தில் இறந்துவிட, வெளியே வந்த குருமுனீஸ்வரனை அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சுற்றிவளைத்து கைது செய்தனர். மனைவி தன்னை மதிக்காமல், தன்னுடன் வந்து வாழாமல் போனதாலேயே கொலை செய்ததாக குருமுனீஸ்வரன் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. 

மாணவர்களின் கண்முன்னேயே அரங்கேறிய இந்தக் கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பள்ளிக்குள் தலைக்கவசத்துடன் நுழைந்த நபரை தீர விசாரிக்காமல் உள்ளே அனுமதித்த நிர்வாகத்தின் அலட்சியம், குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை பெற்றோர் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.