​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜெயலலிதா சொத்துக்களின் மதிப்பை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவு

Published : Jul 22, 2019 5:18 PM

ஜெயலலிதா சொத்துக்களின் மதிப்பை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவு

Jul 22, 2019 5:18 PM

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்களின் தற்போதைய மதிப்பை கண்டறிந்து அறிக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 913 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை நிர்வகிக்க தனி நிர்வாகியை நியமிக்க கோரி சென்னை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் புகழேந்தி, ஜானகிராமன் மனுதாக்கல் செய்தனர். இந்த விவகாரத்தில் தங்களை நிர்வாகிகளாக நியமிக்க வேண்டுமெனவும், அரசு நினைவிடமாக வேதா நிலையத்தை மாற்ற ஆட்சேபித்தும் தீபக், தீபா தரப்பில் பதில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ஏற்கனவே, ஜெயலலிதாவின் நான்கு சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், 17 கோடி ரூபாய் அளவிற்கு வரிபாக்கி உள்ளதாகவும் வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்தது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு தாங்கள் வாரிசு என அறிவிக்கும்படியும் வருமான வரி பாக்கியை தாங்கள் கட்ட தயாராக இருப்பதாகவும் தீபா, தீபக் தரப்பில், தெரிவிக்கப்பட்டது.

சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை மட்டுமே நியமிக்க வேண்டும் என்றும், தீபா, தீபக் அதற்கு வாரிசு உரிமை கோர முடியாது என புகழேந்தி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஜெயலலிதா மீது எந்த வழக்குகளும் நிலுவையில் இல்லை என அமலாக்க துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவில்லமாக மாற்ற உத்தரவிடப்பட்ட நிலையில் தற்போது மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில் உள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு தீபா, தீபக் ஆகியோர் உரிமை கோர முடியாது என்றால் மக்களுக்கு கொடுப்பது தான் மனுதாரரின் விருப்பமா? என புகழேந்தி தரப்பிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஜெயலலிதாவின் சொத்துக்கள் எங்கெல்லாம் உள்ளது? அந்த சொத்துக்களின் தற்போதைய மதிப்பு என்ன ? என்பது குறித்த முழு விவரங்களை வருமான வரிதுறை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை நினைவில்லமாக மாற்றும் பணி தற்போது எந்த நிலையில் உள்ளது? என்பது தொடர்பாக தமிழக அரசு விளக்க அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.