​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
”போதுமான தண்ணீர் இல்லை... 90 அடியை தொடட்டும்” - முதலமைச்சர் பழனிசாமி

Published : Jul 22, 2019 4:09 PM



”போதுமான தண்ணீர் இல்லை... 90 அடியை தொடட்டும்” - முதலமைச்சர் பழனிசாமி

Jul 22, 2019 4:09 PM

மேட்டூர் அணையில் தற்போது போதுமான தண்ணீர் இல்லாதால் நீர்மட்டம் 90 அடியை எட்டிய பிறகு திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

சேலம் மாவட்டம் ஓமலூரில் புறநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 8 வழிச்சாலை என்பது சேலத்திற்கு மட்டுமான திட்டம் அல்ல என்றார். விவசாயிகளை வற்புறுத்தியோ அச்சுறுத்தியோ நிலத்தை பெறும் எண்ணம் அரசுக்கு கிடையாது என்றார்.

 

தீவிரவாதத்தை தடுக்க மத்திய அரசுடன் இணைந்து தமிழகஅரசு செயல்பட்டு வருகிறது என்றும், இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்பு குறித்து கூட, தமிழக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததாகவும் முதலமைச்சர் கூறினார்.

சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர், நீர்மட்டம் 90 அடியை எட்டிய பிறகு அணையை திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார். அதற்கு முன்பு திறக்கப்பட்டால் விவசாயிகளுக்கு உரிய பலன் கிடைக்காமல் போய் விடும் என்றும் அவர் கூறினார்.

 

இதனிடையே, கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் ஒகேனக்கலை பிற்பகல் 2.30 மணியளவில் வந்தடைந்தது. நாளை மாலை அல்லது இரவுக்குள் மேட்டூர் அணையை தண்ணீர் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 8 300 கன அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.