​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்திய பணத்திற்கு பன்மடங்கு வெளிநாட்டுப் பணம் தருவதாக மோசடி

Published : Jul 21, 2019 6:57 PM



இந்திய பணத்திற்கு பன்மடங்கு வெளிநாட்டுப் பணம் தருவதாக மோசடி

Jul 21, 2019 6:57 PM

ந்தியப் பணத்திற்கு பன்மடங்கு வெளிநாட்டுப் பணம் தருவதாகக் கூறி மோசடி செய்த வடமாநிலக் கும்பலை, சென்னை திருவான்மியூர் போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் நந்தியம்பாக்கம் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்தவர் பர்வேஸ். சௌகார்பேட்டையில் செல்போன் சர்வீஸ் கடை வைத்திருக்கும் இவரை கடந்த வியாழக்கிழமை அன்று அணுகிய வடமாநில இளைஞர் ஒருவர், தன்னிடம் இந்திய மதிப்பின் படி 27 லட்சம் ரூபாய் அளவுக்கு சவுதி ரியால் இருப்பதாக கூறியுள்ளார்.

இவ்வளவு பெரிய தொகையை மாற்றுவதற்கு பயமாக இருப்பதாகவும் எனவே 3 லட்சம் ரூபாய் கொடுத்தால், ரியால் அனைத்தையும் கொடுத்து விடுவதாகவும் அந்த நபர் கூறியுள்ளார். இதைக் கேட்ட பர்வேஸ், தன்னிடம் ரியாலைக் காண்பித்தால் 3 லட்சம் ரூபாய் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார். திருவான்மியூர் வடக்கு மாட வீதியில் வைத்து பணத்தை பரிமாறிக் கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது. ரியாலை பார்த்த பின்னர், 3 லட்சம் ரூபாய் பணத்தை பர்வேஸ் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

ரியால் இருந்த பையை வீட்டிற்கு எடுத்து வந்த பார்த்த போது, சில கட்டுகளில் சில ரியால் தாள்களை மட்டும் வைத்து விட்டு ஒவ்வொரு கட்டின் உள்ளேயும் காகிதங்களை கத்தரித்து வைத்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக திருவான்மியூர் காவல் நிலையத்தில் பர்வேஸ் புகார் அளித்தார். இதுதொடர்பாக திருவான்மியூர் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது, மோசடிக் கும்பல் பயன்படுத்திய இருசக்கரவாகனம் அடையாளம் காணப்பட்டது.

பதிவெண்ணை வைத்து கேளம்பாக்கத்தில் வசித்து வந்த டெல்லியைச் சேர்ந்த சுமன் என்பவர் முதலில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், மேற்கு டெல்லியை சேர்ந்த அனிக் ஷேக், அவரது மனைவி பாத்திமா, மேற்கு வங்கத்தை சேர்ந்த ரபீக், ஜஹீத், பேகம், அகிலேமா என 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுபோன்று பல இடங்களில் அவர்கள் மோசடியில் ஈடுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். உருது மொழி பேசும் வணிகர்களை குறிவைத்து அவர்கள் மோசடியில் ஈடுபட்டு இருப்பதும் அம்பலமாகி உள்ளது.