கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மின்சாரம் செலுத்தி கொல்ல முயன்ற மனைவி உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஓசூரை அடுத்த நாட்றம்பாளையத்தை சேர்ந்த சின்னராஜ் - ஜோதிக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகும் நிலையில் 6 வயது மகன் உள்ளான். இன்று அதிகாலையில் சின்னராஜ் உறங்கிக் கொண்டிருந்த போது ஜோதி மற்றும் 4 பேர் சேர்ந்து சின்னராஜை வாட்டர் ஹீட்டர் மூலம் மின்சாரம் செலுத்தி கொல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது.
நீருக்குள் போட்டு சூடுபடுத்தும் வகையில் சுருள் கம்பி அமைப்புடன் உள்ள இந்தவகை வாட்டர் ஹீட்டரை மின் இணைப்புடன் நீருக்கு வெளியே வைத்திருக்கும் போது அதிக சூடாகிவிடும்.
இதைப் பயன்படுத்தி கொலை செய்ய நடைபெற்ற முயற்சியில் இருந்து தப்பிய சின்னராஜ் உடலில் பலத்த காயங்களுடன் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
மனைவி ஜோதியின் முறைகேடான உறவு தனக்கு தெரிந்த போதும், மகனின் எதிர்காலத்துகாக சமாதானப்படுத்தி வாழ்ந்து வந்ததாக சின்னராஜ் தெரிவித்தார். தலைமறைவாக உள்ள ஜோதி உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.