​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நடிகர் சூர்யாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த இயக்குநர்கள்

Published : Jul 21, 2019 3:28 PM



நடிகர் சூர்யாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த இயக்குநர்கள்

Jul 21, 2019 3:28 PM

மிழ்நாடு இயக்குநர்கள் சங்க தேர்தலில் வாக்களித்த பின் பேட்டியளித்த இயக்குநர்கள், ஒரே குரலில் தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை குறித்த நடிகர் சூர்யாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். 

தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கத் தேர்தல் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு அந்த சங்கத்தின் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட இயக்குநர் பாரதிராஜா பின்னர் பதவி விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து சங்கத்தின் தலைவர் மற்றும் துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் ஜூலை 21ஆம் தேதி நடைபெறும் என்று கடந்த 8ஆம் தேதி நடைபெற்ற அவசர பொதுக்குழு கூட்டத்திற்கு பின் அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று வடபழனியில் உள்ள இசையமைப்பாளர் கட்டிடத்தில் இந்த தேர்தல் தொடங்கியது. இதில் 2 ஆயிரத்து 45 பேர் வாக்களிக்க தகுதிப்பெற்றுள்ளனர். தலைவர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணி மற்றும் வித்யாசாகர் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

முன்னதாக சங்கத்தின் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்காக போட்டியின்றி முறையே ஆர்.வி. உதயக்குமார் மற்றும் பேரரசு ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில் 2 துணை தலைவர் பதவிக்காக கே. எஸ். ரவிக்குமார், ரவிமரியா, வேல்முருகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். 4 துணை செயலாளர் பதவிகளுக்கு லிங்குசாமி, சுந்தர் சி உள்ளிட்ட 6 பேர் போட்டியிடுகின்றனர். மேலும் 12 செயற்குழு உறுப்பினர்கள் பதிவிக்கு 30 பேர் போட்டியிடுகின்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த தேர்தல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ள நிலையில் 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதனிடையே தேர்தலில் வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர்கள் சிலர் தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை குறித்து நடிகர் சூர்யாவின் கருத்துக்களுக்கு ஆதரவாக பேசினர். அவர்கள் பேசும் போது, கல்விக் கொள்கை குறித்து பேச சூர்யாவுக்கு முழு உரிமை உள்ளது என்றனர்.

முன்னதாக தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை குறித்து கருத்து தெரிவித்திருந்த சூர்யா, புதிய கல்விக்கொள்கையில் அனைத்து பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வுக்கு பரிந்துரைத்திருப்பது அச்சமூட்டுகிறது என்றும் சமமான தேர்வு வைப்பதைவிட சமமான தரமான இலவசக்கல்வியை உறுதி செய்வது அரசின் பொறுப்பு என்றும் தெரிவித்திருந்தார்.

இதனிடையே தேசிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யா பேசியது பற்றி தனக்கு தெரியாது என இயக்குநர் ஷங்கர் கூறினார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், சூர்யாவின் கருத்து குறித்து தனக்கு தெரியாது என இயக்குநர் ஷங்கர் கூறியதைப் பற்றி பேசும் போது, உயர்ந்த நிலையில் இருக்கும் இயக்குநர்களுக்கு சமூக பொறுப்பு அவ்வளவு தான் என்றார்.