​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாளை பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது சந்திரயான்-2 விண்கலம்..!

Published : Jul 21, 2019 3:05 PM



நாளை பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது சந்திரயான்-2 விண்கலம்..!

Jul 21, 2019 3:05 PM

ந்திரயான் 2 விண்கலம், நிலவின் தென் துருவத்தில் தரை இறங்குவதால், சூரிய மண்டலம் உருவானது எப்படி என்ற கேள்விக்கு விடை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். 

சந்திரயான் 2 விண்கலம், நாளை பிற்பகல் 2.43 மணி அளவில் விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த திட்டம் வெற்றி அடையும் பட்சத்தில், பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும் என்று இஸ்ரோவின் முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை கூறியுள்ளார். நிலவில் தண்ணீர் இருப்பதை சந்திரயான் 2 உறுதி செய்யும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பாதுகாப்பான அணு சக்திக்குத் தேவையான ஹீலியம் இருப்பதால், அதை பூமிக்கு எடுத்து வருவதற்கான முன் முயற்சியாக சந்திரயான் 2 இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இத்திட்டம் வெற்றி அடையும் பட்சத்தில், எதிர்காலத்தில் நிலவு சுற்றுலாத் தலமாக மாறும் என்றும் கூறியுள்ள மயில்சாமி அண்ணாதுரை, அமெரிக்காவுக்கு சென்று வருவது போல மனிதர்கள் நிலவுக்குச் சென்று வரலாம் என்றும் தெரிவித்துள்ளார். அண்டார்டிகாவைப் போல, நிலவிலும் மனிதர்களை சில நாட்கள் தங்க வைப்பதற்கான முன் முயற்சியாக இந்தப் பயணம் அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சந்திரயான் 2 வெற்றிக்குப் பின்னர், ஏற்கெனவே பாதியில் கைவிடப்பட்ட சந்திரயான் 3 திட்டமும் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இத்திட்டத்தின் நோக்கம், ஆராய்ச்சிக்குத் தேவையான நிலவின் மாதிரிகளை எடுத்து வருவதே ஆகும் என்றும் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.