​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
போக்குவரத்து போலீசார் பண வேட்டை? குடித்த டீ.க்கும் பணம் வசூலித்த அவலம்?

Published : Jul 21, 2019 2:38 PM



போக்குவரத்து போலீசார் பண வேட்டை? குடித்த டீ.க்கும் பணம் வசூலித்த அவலம்?

Jul 21, 2019 2:38 PM

வாகன விபத்தில் சிக்குபவர்களிடம் வழக்கு பதிய போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வசூல் வேட்டையில் ஈடுபடுவது என்பது தீர்வு காணப்படாத நீண்ட கால குற்றச்சாட்டாக உள்ளது. இந்த வகையில், சென்னை குரோம்பேட்டை போக்குவரது புலனாய்வு போலீசார் சி.எஸ்.ஆர் பதிவு செய்ய மட்டுமின்றி, தேநீருக்காவும் கூட பணம் வசூலித்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...

சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள தாம்பரம் காவல் நிலையத்தின் இரண்டாவது தளத்தில் குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு உள்ளது. சென்னை விமானநிலையம் முதல் பெருங்களத்தூர் வரையிலான ஜி.எஸ்.டி சாலை, பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலை, தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் அனகாபுத்தூர் வரையிலான பகுதிகள் குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரின் எல்லைகளாக உள்ளது. இந்த பகுதிகளில் தினமும் விபத்துகள் நிகழ்வதால், அவற்றை விசாரிக்கும் குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் காட்டில் தினமும் பணமழை பெய்வதாக சொல்லப்படுகிறது.

விபத்து ஏற்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள், சிறிய விபத்துகளில் யாருக்கும் காயம் ஏற்படாமல் வாகனங்கள் மட்டும் சேதமடைந்து அவற்றை காப்பீடு மூலம் சரி செய்ய சிஎஸ்ஆர் வாங்க வருபவர்கள் என யாராக இருந்தாலும் போலீசாருக்கு கொடுக்கவேண்டியதை கொடுத்தால் மட்டுமே வேலை தொடங்கும் என்கின்றனர் பாதிக்கப்பட்டவர்கள்....

மேற்கு தாம்பரம், பழைய ஸ்டேட் பேங்க் காலனி பகுதியை சேர்ந்தவர் தீபக்... இவர் புதிதாக கார் வாங்க திட்டமிட்டு நேற்று முன்தினம் காலை வேளச்சேரி பகுதியில் உள்ள தனியார் கார் ஷோ ரூமில் இருந்து ஒரு காரை சோதனை ஓட்டத்திற்காக வரவழைத்துள்ளார். பின்னர் காலை 11:30 மணியளவில் தீபக் கரை ஓட்டிச் சென்றுள்ளார். தனது வீட்டின் அருகே உள்ள தெரு ஒன்றில், காரை திருப்ப முயற்சித்தபோது எதிர்பாராதவிதமாக ஒரு வீட்டின் முன்புறம் போடப்பட்டிருந்த கான்கிரீட் சரிவின் மீது ஏறி கார் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

எதிர்பாராதவிதத்தில் இந்த விபத்து நடந்ததால், சிஎஸ்ஆர் வாங்கி காப்பீடு மூலம் காரை சரிசெய்து கொள்ளலாம் என கார் ஷோ ரூம் ஊழியர்கள் மற்றும் தீபக் ஆகியோர் குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். சம்பவம் குறித்து சிஎஸ்ஆர் தயார் செய்த உதவி ஆய்வாளர் குணசேகர் என்பவர், அதற்கு தீபக்கிடம் 2,750 ரூபாய் கேட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தீபக் வினவியபோது, கேட்ட பணத்தை கொடுக்கவில்லை என்றால் அதிகவேக விபத்து என வழக்கு பதிவு செய்யப்படும் என்று உதவி ஆய்வாளர் குணசேகர் மிரட்டியதாக சொல்லப்படுகிறது. ஒருவழியாக பேரம் பேசி, கடைசியில், ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொண்டு, அந்த உதவி ஆய்வாளர் சிஎஸ்ஆர் வழங்கியுள்ளார். இந்த சம்பவத்தின்போது அங்குள்ள போலீசாருக்கு டீ கொடுக்க வந்தவரிடம் டீ வாங்கி குடித்த போலீசார், தாங்கள் குடித்த தேநீருக்கான 105 ரூபாயை தீபக்கிடம் வாங்கி கொடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் வெளியில் கசிந்து செய்தியாளர்கள் போக்குவரத்து போலீசாரிடம் விசாரிக்க, மழுப்பலான பதிலை கூறியதோடு, தீபக்கை அழைத்து, மீண்டும் வந்து, தாங்கள் கொடுத்த ஆயிரம் ரூபாயை பெற்றுச்செல்லும்படி கூறியுள்ளனர்.

இதையடுத்து போலீசார் சம்மந்தப்பட்ட கார் ஷோ ரூம் ஊழியர்களை மீண்டும் வரவழைத்து அவர்களிடம் பணம் எதுவும் வாங்கவில்லை என எழுதி வாங்கியதோடு, தீபக் வந்து பணத்தை பெற்றுக்கொண்டால் மட்டுமே அவர்களை அங்கிருந்து அனுப்புவோம் என தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, தீபக் மீண்டும் அங்கு சென்றபோது, அவரிடம் ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துவிட்டு, விபத்து ஏற்பட்டதற்கு போக்குவரத்து போலீசாரிடம் ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தவேண்டும் என போலீசார் கூறியுள்ளனர். போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஒருவர் அவரது இருசக்கர வாகனத்திலேயே தீபக்கை அழைத்துச்சென்று விபத்து நடந்த இடத்தில் வைத்து வழக்கு பதிந்து அபராதம் விதித்துள்ளார். தெருவொன்றில் எதிர்பாராத விதமாக நடந்த விபத்தை அதிகவேக பயணத்தால் விபத்து என தீபக் மீது குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஒரு போக்குவரத்து காவல் நிலையத்தில் நடந்த இந்த ஒரு சம்பவத்தை போன்றே, விபத்து வழக்குகளை விசாரிக்கும் பெரும்பாலான போக்குவரத்து காவல் நிலையங்களில் நிலைமை உள்ளதாக கூறப்படுகிறது.. சட்டம் ஒழுங்கு, குற்றத் தடுப்பு என தனது நடவடிக்கையால் பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ள சென்னை பெருநகர காவல் ஆணையர், போக்குவரத்து காவல் துறையில் நடக்கும் இது போன்ற அவலங்களை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்....