​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அத்திவரதர் தரிசனம் கோலாகலம் - தலைமைச் செயலர், டிஜிபி ஆய்வு

Published : Jul 21, 2019 2:24 PM



அத்திவரதர் தரிசனம் கோலாகலம் - தலைமைச் செயலர், டிஜிபி ஆய்வு

Jul 21, 2019 2:24 PM

காஞ்சிபுரத்தில், அத்திவரதரை தரிசிப்பதற்கான ஏற்பாடுகளை தலைமைச் செயலர், டிஜிபி ஆகியோர் ஆய்வு செய்தனர். நீண்ட நேரம் நிற்கும் பக்தர்களுக்கு நாற்காலிகளும், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வீல்சேர்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக, தலைமைச் செயலாளர் கூறியிருக்கிறார். 

காஞ்சிபுரத்தில், அத்தி வரதரை தரிசிக்க வரும் லட்சோபலட்ச பக்தர்களுக்கான வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நேற்று, தலைமைச் செயலகத்தில், அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்டோருடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, காஞ்சிபுரத்திற்கு வந்த தலைமைச் செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி ஆகியோர், நள்ளிரவு 12 மணி முதல், காலை வரையில், ஆய்வு மேற்கொண்டனர். பக்தர்களுக்கு செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டம் ஆட்சியர் பொன்னையா உள்ளிட்ட அதிகாரிகளுடன், தலைமைச் செயலாளரும், டிஜிபி ஆலோசனை மேற்கொண்டனர்.

இதன் பின்னர், இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய தலைமைச் செயலாளர் சண்முகம், அத்தி வரதரை காண வரும் பக்தர்கள், எவ்வித சிரமமும் இன்றி, தரிசனம் செய்வதற்காக, அனைத்து ஏற்பாடுகளும் நீக்கமற செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

பக்தர்களின் பயன்பாட்டிற்காக பேட்டரி கார்களை முறையாக இயக்க அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் தலைமைச் செயலாளர் கூறினார். மருத்துவக் குழுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாகவும், முதியவர்களுக்கு பழச்சாறு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்தார். நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள், சற்று இளைப்பாறுதல் பெறுவதற்காக நாற்காலிகள் போடப்படும் என தலைமைச் செயலாளர் கூறினார்.

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு, தடையின்றி வீல்சேர் வசதிகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக, தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை, 18004258978 மற்றும் 27237425, 27237207ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு, பக்தர்கள், தங்களுக்குச் தேவையான தகவல்களை பெறலாம் என்றும் தலைமைச் செயலாளர் கூறினார்.

தலைமைச் செயலாளரைத் தொடர்ந்து பேசிய தமிழ்நாடு காவல்துறை டிஜிபி திரிபாதி, பக்தர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு, கூடுதல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவதாகத் தெரிவித்தார். அதிகாலையில் ஏராளமான பக்தர்கள் வருவதாகவும், எனவே, ஒரே நேரத்தில், அனைவரும் கூடுவதை தவிர்க்கும் வகையில், கூட்டம் குறைவாக உள்ள இரவு நேரத்திலும், பக்தர்கள் வருகை புரிய வேண்டும் என்று, டிஜிபி திரிபாதி கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே, காஞ்சிபுரத்தில், இன்று, 21ஆவது நாளாக, ஊதா நிற பட்டுத்தி அருள்பாலிக்கும் அத்தி வரதரை தரிசிப்பதற்காக, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர். நேற்று இரவு வரை, 28 லட்சத்து 35 ஆயிரம் பக்தர்கள், அத்தி வரதரை தரிசனம் செய்துள்ளனர்.

முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தங்குதடையின்றி வீல் சேர்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவுகள், அதிகாரிகளின் நேரடி பார்வையில் பரிசோதிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன.

பாதுகாப்பு பணிக்காக, திருச்சி, திருநெல்வேலி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து, கூடுதலாக ஆயிரம் போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம், காஞ்சிபுரத்தில், அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கான பாதுகாப்புப் பணியில், 3 ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.