​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் புறவழிச்சாலை, பாலங்களை திறந்துவைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Published : Jul 21, 2019 12:46 PM



சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் புறவழிச்சாலை, பாலங்களை திறந்துவைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Jul 21, 2019 12:46 PM

திருச்செங்கோடு தொடங்கி சங்ககிரி - கொங்கணாபுரம் - தாரமங்கலம் வழியாக ஓமலூர் செல்லும் சாலை, 4 வழிச்சாலையாக விரிவுபடுத்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சேலம் சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதிய வழித்தடங்களில் செல்லும் பேருந்துகளின் இயக்கத்தை, தாரமங்கலத்தில் தொடங்கி வைத்தார். பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில், 3.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தாரமங்கலம் புறவழிச்சாலையை பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். மேலும் கொங்கணாபுரம் வடகரை வாய்க்கால் - நரிமேடு சாலை, தொளசம்பட்டி சாலையில் இரு மேம்பாலங்களையும் அவர் திறந்து வைத்தார். 

பின்னர் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சாலை உள்கட்டமைப்பில் சிறந்த மாநிலமாக தமிழகம் உள்ளது என்று குறிப்பிட்டார். தொழில் வளர்ச்சிக்கு சாலை உள்கட்டமைப்பு மிக அவசியம் என்று தெரிவித்த அவர், புதிய சாலைத் திட்டங்களையும் அறிவித்தார். திருச்செங்கோடு தொடங்கி சங்ககிரி - கொங்கணாபுரம் - தாரமங்கலம் வழியாக ஓமலூர் செல்லும் சாலை, 4 வழிச்சாலையாக விரிவுபடுத்தப்படும் என்ற அறிவிப்பை அவர் வெளியிட்டார். ஓமலூர் தொடங்கி மேச்சேரி வரையிலும், பவானி - மேட்டூர், மேட்டூர் - தொப்பூர் இடையேயான சாலைகளும் விரிவுபடுத்தப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்தார். மேலும் ஓமலூர் தொடங்கி மேட்டூர் வரை 4 ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்படும் என்றும் அவர் கூறினார்.

விபத்து, விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள், போக்குவரத்து நெரிசல் ஆகிய அனைத்தையும் தடுக்க சாலைகள் விரிவாக்கம் அவசியம் என்று கூறிய அவர், இதற்காக நிலம் தேவைப்படும் போது அதை மனமுவந்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும், சேலம் மக்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில், உருக்காலை வளாகத்தில் ராணுவ தளவாட உதிரிபாக ஆலை அமைக்கப்பட உள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து எடப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு வேண்டிய நிதியை பெற வலியுறுத்தப்படும் என்றும், அணை பாதுகாப்பு மசோதாவில் தமிழகத்திற்கு தேவையான திருத்தங்கள் செய்யப்பட்டால் ஏற்கப்படும் என்றும் இல்லை என்றால், ஏற்கப்படாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.