​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் நீர் நிலைகளின் கொள்ளளவை அதிகரிக்க நடவடிக்கை

Published : Jul 21, 2019 9:24 AM



தமிழகத்தில் நீர் நிலைகளின் கொள்ளளவை அதிகரிக்க நடவடிக்கை

Jul 21, 2019 9:24 AM

தமிழகத்தில் நீர் நிலைகளின் கொள்ளளவை அதிகரிக்க ஆயிரத்து 250 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

பேரவையில் நேற்று 110 விதிகளின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர், கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளவும், வரும் காலங்களில் பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்தவும் மழை நீர் சேகரிப்பு, நீர் நிலைகளைப் பாதுகாத்து கொள்திறனை அதிகரித்தல், நிலத்தடி நீரை செறிவூட்டி, குடிநீர் வழங்கலை நிலைப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை செயல்படுத்த வேண்டியிருப்பதாகத்தெரிவித்தார். வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த துறைகளின் நீர் பயன்பாட்டுத் திறனை அதிகரிப்பதோடு, மானாவாரி வேளாண்மைக்காக மழை நீர் சேகரிக்கும் திட்டத்தை செயல்படுத்துதல், பயன்படுத்தப்பட்ட நீரை  மறுசுழற்சி செய்து உபயோகப்படுத்துவதன் மூலம் நன்னீருக்கான தேவையை குறைத்தல் ஆகியவையும் அவசியம் என்று அவர் கூறினார்.

ஆறுகள், முக்கிய கடற்கரைகள், முகத்துவார நீர்நிலைகள், கழிமுகங்கள், சிற்றோடைகள், சதுப்பு நிலங்களின் சூழலியலை மீட்டெடுத்தல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார். இத்திட்டம் மாவட்ட அளவில் ஆட்சியர்கள் தலைமையிலும் நகர்ப் பகுதிகளில் வார்டு வாரியாகவும் செயல்படுத்தப்படும் என்ற அவர், கிராமங்கள், ஒன்றியங்களில் நீர்ப் பாதுகாப்பு வாரியம் அமைக்கப்பட்டு, அவற்றில் பெண்கள் பெருவாரியாக கலந்துகொண்டு செயல்படுவது உறுதி செய்யப்படும் என்றார்.

இது தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி, பொது மக்களின் பங்களிப்பு, அரசுசாரா நிறுவனங்கள், தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் ஆகியோரின் பங்களிப்பு திரட்டப்பட்டு, மக்கள் இயக்கமாக  செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார். இது தொடர்பான தீவிர பிரச்சார இயக்கம் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கி ஒருமாத காலத்திற்கு செயல்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

பருவமழை காலத்திற்கு முன்பு நீர்நிலைகளை மேம்படுத்தி, அதிக அளவு மழை நீரை சேமிக்க வழி வகை செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஏற்கெனவே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிதி 750 கோடி ரூபாயுடன் ரூபாயுடன் கூடுதலாக சிறப்பு நிதியாக 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு மொத்தம் 1,250 கோடி ரூபாய் இப்பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சென்னையில் 114 நீர்நிலைகளில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் முதலமைச்சர் கூறினார்.