​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எச்.ஐ.வி தொற்று பாதித்த ரத்தம் செலுத்தப்பட்ட வழக்கு

Published : Jul 21, 2019 8:03 AM

எச்.ஐ.வி தொற்று பாதித்த ரத்தம் செலுத்தப்பட்ட வழக்கு

Jul 21, 2019 8:03 AM

சென்னை குழந்தைகள் நல மருத்துவமனையில் 20 ஆண்டுகளுக்கு முன்பு சிகிச்சை பெற வந்த ஆண் குழந்தைக்கு எச்.ஐ.வி., தொற்று பாதித்த ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில், 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கடந்த 1999ம் ஆண்டில், சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர், தன் குழந்தையை சிகிச்சைக்காக, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு சிகிச்சையின் போது அந்த குழந்தைக்கு. எச்.ஐ.வி. பாதித்த ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. இதனால், மருத்துவமனை நிர்வாகம் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி சென்னை அமர்வு நீதிமன்றத்தில், குழந்தையின் பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு சென்னை17வது கூடுதல் அமர்வு நீதிபதி தேன்மொழி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது தீர்ப்பளித்த நீதிபதி, நோயாளிக்கு ரத்தம் செலுத்தும் முன் எய்ட்ஸ் மற்றும் மஞ்சள்காமாலை நோய் கிருமிகள் உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

ரத்தத்தை ஆய்வு செய்ததாக டாக்டர்கள் தரப்பில் கூறப்பட்டாலும் அதற்கான ஆவணங்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை என்றும், டாக்டர்களின் கவனக் குறைவால் குழந்தையின் உடலில், எச்.ஐ.வி. கிருமி பரவி உள்ளதாகவும் நீதிபதி குறிப்பிட்டார். எனவே, பாதிக்கப்பட்ட குழந்தைக்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடும், வழக்கு செலவாக, குழந்தையின் பெற்றோருக்கு, ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயும் மருத்துவமனை நிர்வாகம் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். எச்.ஐ.வி தொற்று பாதித்த ரத்தம் செலுத்தப்பட்ட நபர், தற்போது டிப்ளமோ முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.