​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அத்திவரதர் தரிசனம் - கூடுதல் ஏற்பாடுகள்

Published : Jul 20, 2019 2:54 PM

அத்திவரதர் தரிசனம் - கூடுதல் ஏற்பாடுகள்

Jul 20, 2019 2:54 PM

காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்தின் 20வது நாளான இன்று மாற்று திறனாளிகள், வயதானவர்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளை வைத்திருப்பவர்களுக்கு தனி வழி ஏற்பாடு செய்யப்பட்டு, வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு உணவு வழங்க தொண்டு நிறுவனங்களுக்கு அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது. 

அத்திவரதர் தரிசனத்தைக் காண நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்த நிலையில், விடுமுறை தினங்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும், அதிகரிக்கும் கூட்டத்தை முன்னிட்டு அவ்வப்போது கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள், பச்சிளம் குழந்தைகளை வைத்திருக்கும் தாய்மார்கள் உள்ளிட்டோருக்கு தனி வழி ஏற்படுத்தித் தர கோரிக்கை எழுந்தது. இதனையேற்ற மாவட்ட நிர்வாகம் கிழக்கு ராஜ கோபுரத்திலிருந்து தனியாக கோவில் உட்பிரகாரத்தில் வழி அமைத்து நேரடியாக சாமி தரிசனம் செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளது. ஏற்கனவே உள்ள 3 இலவச தரிசன வரிசையில் மாற்றுத் திறனாளிகள் தரிசனம் செய்ய வசதிகள் உள்ள நிலையில், இந்த 4 வது வரிசை மூலம் மேலும் சுலபமாக தரிசனம் செய்ய முடியும்.

இது ஒருபுறம் இருக்க சுகாதாரத்துறை சார்பில் 40 மருத்துவர்கள், 10 மேற்பார்வையாளர்கள் மற்றும் 300 ஊழியர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினரும் ஆங்காங்கே முகாம்கள் அமைத்து மருத்துவ சேவையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்கும் பக்தர்கள் உணவு கிடைக்காமல் அவதியடைவதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தயிர்சாதம், எலுமிச்சை சாதம், பால் உள்ளிட்டவற்றை வழங்க தொண்டு நிறுவனங்களுக்கும் போலீசாருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உணவு உண்ணும் பக்தர்கள் குப்பைகளை கண்ட இடங்களில் வீசாமல் முறையாக குப்பைத் தொட்டியில் போடுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.