​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை, நெல்லை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் NIA அதிரடி சோதனை

Published : Jul 20, 2019 7:54 AM



சென்னை, நெல்லை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் NIA அதிரடி சோதனை

Jul 20, 2019 7:54 AM

அன்சாருல்லா எனும் பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாக டெல்லியில் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 14 பேரின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் தாக்குதல் நடத்தும் சதி திட்டத்தோடு, அன்சாருல்லா என்ற பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டிய புகார் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது.

இதுதொடர்பாக நாகையில் மஞ்சக்கொல்லை, சிக்கல் ஆகிய ஊர்களில், ஹாரிஸ் முகமது, அசன் அலி ஆகியோரது வீடுகளில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் முடிவில், இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இதே போல் அன்சாருல்லா அமைப்பைச் சேர்ந்த 14 பேர் துபாயில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். பிறகு அவர்கள் டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டனர். சென்னை, நெல்லை, மதுரை, பெரம்பலூர், ராமநாதபுரம், தேனி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அவர்கள், கடந்த திங்கள்கிழமை அன்று, விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்டனர்.

நாகையில் கைது செய்யப்பட்டவர்களையும் சேர்த்து 16 பேரையும் எட்டு நாள் காவலில் எடுத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். விசாரணை ஒருபுறம் நடக்க, மறுபுறம் அந்த 14 பேரது வீடுகளில் போலீஸ் பாதுகாப்புடன், என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை பிராட்வே, மதுரை நரிமேடு, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை, பெரம்பலூர் மாவட்டம் லெப்பை குடிகாடு, தேனி, நெல்லை மேலப்பாளையம் ஆகிய ஊர்களில் உள்ள 14 பேரது வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களிடமும் விசாரணை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதனிடையே திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில், அகமது அசாருதீனின் வீட்டின் பூட்டை உடைத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரது வீடு பூட்டப்பட்டிருந்த காரணத்தால், உறவினர்கள், போலீசார், கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். முன்னதாக, அதிகாரிகள் கொண்டு வந்த பொருட்களையும், அவர்களது உடைமைகளையும் கிராம நிர்வாக அலுவலர் சோதனையிட்டார்.

இதை அடுத்து அகமது அசாருதீனின் வீட்டில் சோதனை நடத்திய அதிகாரிகள், ஒரு ஐபோன், சிம் கார்டு, குறுந்தகடுகள் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.

இதேபோல் நாகை மாவட்டம் மடப்புரத்தைச் சேர்ந்த முகமது இப்ராஹிம் வீட்டிலும் என்.ஐ.ஏ. சோதனை நடந்தது. அவரது வீடு 15 ஆண்டுகளாக பூட்டப்பட்டு இருந்ததால், ஊர்மக்கள், கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் வீடு திறக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையில் எந்த ஆவணங்களும் சிக்கவில்லை என கூறப்படுகிறது.