​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
“கள்ளச்சந்தையில் விற்கப்படும் இலவசச் சாம்பல்”

Published : Jul 19, 2019 5:26 PM



“கள்ளச்சந்தையில் விற்கப்படும் இலவசச் சாம்பல்”

Jul 19, 2019 5:26 PM

சேலம் மாவட்டம் மேட்டூர் அனல்மின் நிலைய இலவச சாம்பல் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாகவும் இதனால் ஆண்டுக்கு 25 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

மேட்டூர் அனல்மின் நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 23 ஆயிரம் டன் நிலக்கரி எரியூட்டப்படுகிறது. இந்த நிலக்கரியிலிருந்து நாள் ஒன்றுக்கு சுமார் 5 ஆயிரம் டன் வரை சாம்பல் கிடைக்கிறது.

உலர் மற்றும் ஈர சாம்பலாக வெளியேற்றப்படும் இந்த சாம்பல் தரமானது என்பதால் செங்கல் உற்பத்திக்கும், சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கும் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன.

நிலவளத்தை பாதுகாக்கவும், செங்கல் உற்பத்திக்கு செம்மண் பயன்படுத்துவதை தடுக்கவும் நிலக்கரி சாம்பல் மூலம் செங்கல் உற்பத்தியை ஊக்குவிக்கவும் சிறு, குறு தொழிற் சாலைகளுக்கு மேட்டூர் அனல் மின்நிலைய உலர் சாம்பல் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயமாக ஒரு டன் 675 ரூபாய்க்கு கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் பெரும்பாலான செங்கல் தொழிற்சாலைகள் இலவசச் சாம்பலை செங்கல் உற்பத்திக்குப் பயன்படுத்தாமல் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது.

செங்கல் தொழிற்சாலைகளுக்கு என கொண்டு சென்று உரத் தொழிற்சாலைகளில் இருப்புவைக்கப்பட்டு சிமெண்ட் ஆலைகளுக்கு ஒரு டன் ஆயிரம் ரூபாய் என விற்பனை செய்யப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.

சாம்பலை லாரிகளில் ரீலோடிங் செய்யும்போது ஏற்படும் புழுதியால் பல்வேறு சுவாசக் கோளாறுகள் ஏற்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். மேலும் இதுபோன்ற கள்ளச் சந்தை விற்பனையால் அனல் மின் நிலையத்துக்கு ஆண்டுக்கு 25 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. 

செங்கல் தொழிற்சாலைகளில் உண்மையில் செங்கற்கள்தான் உற்பத்தி செய்யப்படுகிறதா? செங்கல் உற்பத்தி செய்ததாக கணக்கு காட்டி அதற்கு மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளதா? உற்பத்தி வரி, விற்பனை வரி செலுத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்தெல்லாம் அதிகாரிகள் ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.