​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆட்சிக்கு வர மறைமுகமாக திமுக திட்டம் போட்டது - முதலமைச்சர்

Published : Jul 19, 2019 3:46 PM

ஆட்சிக்கு வர மறைமுகமாக திமுக திட்டம் போட்டது - முதலமைச்சர்

Jul 19, 2019 3:46 PM

ஆட்சிக்கு வர மறைமுகமாக திமுக எப்படி திட்டம் போட்டது என அனைவருக்கும் தெரியும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேரவையில் விமர்சித்தார். 

மானியக் கோரிக்கை விவாதத்தின் போது சட்டமன்ற இடைத்தேர்தல், மக்களவை தேர்தல் வெற்றி குறித்து பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பேசிய பொன்முடி, 37 மக்களவை தொகுதிகளில் மக்கள் திமுகவுக்கு ஆதரவை தந்துள்ளதாகக் கூறினார். இதற்கு குறுக்கிட்டு பதிலளித்த முதலமைச்சர், சக்கரம் மேலே போகும், கீழேயும் வரும், 2021ஆம் ஆண்டில் அதிமுகதான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்றார்.

திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என, சக்கரம் கதை மூலமாக முதலமைச்சர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாகக் கூறிய மு.க.ஸ்டாலின், விரைவில் திமுக ஆட்சிக்கு வந்ததும் தாங்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத்தான் போகிறோம் என்றார். அப்போது திமுக கொடுத்த பொய்யான வாக்குறுதியில் ஏமாந்து மக்கள் வாக்களித்துள்ளனர் என்று முதலமைச்சர் குறிப்பிட்டார்.

இடைத்தேர்தலில் 13 இடங்களில் மக்கள் திமுகவிற்கு வாக்களித்துள்ளனர் என்று கூறி, 13 பெரிதா 9 பெரிதா என கேள்வி எழுப்பினார். ஆர்.கே.நகரில் டெபாசிட் கூட வாங்க முடியாத திமுக இப்போது எப்படி வெற்றி பெற்றது எனக் கேட்ட எடப்பாடி பழனிசாமி, மக்கள் ஏமாந்து வாக்களித்துள்ளனர் என்றும், நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளித்தந்து திமுக வெற்றி பெற்றது என்றும் பதிலளித்தார்.

வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என தான் சொல்லமாட்டேன் என்று செல்லூர் ராஜூ குறுக்கிட்டார். கலைஞரின் மகன் என அடிக்கடி சொல்லும் மு.க.ஸ்டாலின், நகைக்கடனை தள்ளுபடி செய்வோம் என உறுதியளித்து மக்களை ஏமாற்றி வாக்கை பெற்றதாக ராஜூ விமர்சித்தார்.

அதற்கு தாங்கள் சொன்னதை நிச்சயமாக நிறைவேற்றுவோம் என மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். தேர்தலில் வாக்காளர்கள் தெளிவான முடிவையே எடுத்திருப்பதாகவும், மக்கள் ஏமாளிகள் அல்ல என்றும்  பொன்முடி கூறினார். ஆட்சிக்கு வர மறைமுகமாக எப்படி திமுக திட்டம் போட்டது என அனைவருக்கும் தெரியும் என்று குறிப்பிட்ட முதலமைச்சர், திமுக.,வின் எண்ணம் எப்போதும் நிறைவேறாது என்றார்.