​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வேலூர் தொகுதியில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் வேட்பு மனு நிறுத்தி வைப்பு

Published : Jul 19, 2019 1:10 PM



வேலூர் தொகுதியில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் வேட்பு மனு நிறுத்தி வைப்பு

Jul 19, 2019 1:10 PM

வேலூர் தொகுதி மக்களவை தேர்தலுக்கான, வேட்புமனுக்கள் பரிசீலனை நடைபெற்றுவரும் நிலையில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மற்றும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தன் மனுக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான வேட்புமனுத்தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அனைத்து கட்சியினர் முன்னிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், புதிய நீதிக் கட்சியின் தலைவரும் அதிமுக வேட்பாளருமான ஏ.சி.சண்முகத்தின் வேட்புமனு பரிசீலனை நடந்தபோது, ஏ.சி.சண்முகம் புதிய நீதி கட்சி தலைவராக உள்ளார் என்றும், அவர் எப்படி அதிமுக-வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியும் எனவும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது குறித்து விளக்கம் அளிக்குமாறு ஏசி சண்முகம் தரப்புக்கு அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். இதனால் அவரது வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், தான் புதிய நீதிக்கட்சியின் தலைவராக இருந்தாலும் அதிமுக-வின் இரட்டை இலைச் சின்னத்தில் தான் போட்டியிடுவதாக எழுத்துப்பூர்வமாக மாவட்ட ஆட்சியரிடம் உறுதி அளிக்கும் பட்சத்தில் அவருடைய வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்படும் என கூறப்படுகிறது.

image

ஏ.சி. சண்முகத்தின் வேட்பு மனு நிறுத்திவைக்கப்பட்ட நிலையில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்தின் மனுவும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

பணப்பட்டுவாடா விவகாரத்தில் கதிர் ஆனந்த் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகத்தின் நிறுவனர் காட்ஃப்ரி நோபல் (( GODFRY NOBEL )) என்பவர் தொடர்ந்த வழக்கு காரணமாக அவரது மனு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கதிர் ஆனந்தின் வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள், மனுவுக்கு ஆட்சேபனை தெரிவித்த காட்ஃப்ரி நோபலிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்துவிட்டு வெளியில் வந்த காட்ஃப்ரி நோபல் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்தார். அவர் பேசிக்கொண்டிருந்தபோதே பின்னால் நின்றிருந்த தி.மு.கவினர் ஒருமையில் பேசியவாறு ஆவேசமாக நெருங்கினர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தி.மு.க ஆதரவாளர்களிடமிருந்து காட்ஃப்ரி நோபலை மீட்டு போலீசார் பத்திரமாக அனுப்பிவைத்தனர்.