​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உயிர் காக்கும் 'தாய்' திட்டம்..!

Published : Jul 18, 2019 9:32 PM

உயிர் காக்கும் 'தாய்' திட்டம்..!

Jul 18, 2019 9:32 PM

தமிழக விபத்து மற்றும் அவசர சிகிச்சை முன்னெடுப்புத் திட்டத்தின் மூலம், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள், 24.4 விழுக்காடு அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளதாக அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கடைபிடிக்கப்படும் விபத்து கால நடைமுறைகளைக் கொண்டதே, தாய் எனப்படும் தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர கால முன்னெடுப்புத் திட்டம் ஆகும். 2017ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தமிழகத்தில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

விபத்து, மாரடைப்பு, வலிப்பு, தீக்காயம் பட்டோர், தற்கொலைக்கு முயன்றோர், ஆகியோரை உடனடியாக அவசர ஊர்திகளில் மீட்டு, அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு முன்கூட்டியே தகவல்களைச் சொல்லி, சிகிச்சை நடைமுறைகளை விரைவுபடுத்தி உயிரிழப்பை தடுப்பதே இத்திட்டத்தின் நோக்கம். 2023ஆம் ஆண்டுக்குள், சாலை விபத்துகளால் நேரும் உயிரிழப்புகளை 33 சதவீதம் அளவுக்கு குறைக்கும் குறிக்கோளைக் கொண்ட தாய் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் 80 மையங்கள் உள்ளன.

ஒவ்வொரு மையத்திலும் நன்கு பயிற்சி பெற்ற செவிலியர்கள், மருத்துவர்கள் இருக்கின்றனர். அவசர ஊர்தி, மருத்துவமனையை வந்தடைந்ததும் அந்தக் குழுவானது விரைவாகச் செயல்பட்டு நோயாளிக்கு தேவையான சிகிச்சையை வழங்கும்.

சாலை விபத்துகளால் உயிரிழந்தோர் எண்ணிக்கை கடந்த 2017ஆம் ஆண்டில் 16 ஆயிரத்து 157 ஆக இருந்ததாகவும், தாய் திட்டம் அமலுக்கு வந்த பிறகு 2018ஆம் ஆண்டில் 12 ஆயிரத்து 216ஆக குறைந்து விட்டதாகவும் அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதுமட்டும் அல்லாமல், தாய் திட்டத்தின் கீழ், நேரம், இடத்தைப் பொறுத்து அவசர ஊர்திகளுக்கு பணி ஒதுக்கப்படுவதால், நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லும் நேரம் 2017-இல், 15.04 நிமிடங்களாக இருந்ததாகவும், 2018ஆம் ஆண்டில் 13.48 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நகரத்தைப் பொறுத்தவரை இந்த நேரமானது 11 நிமிடத்தில் இருந்து 8.36 நிமிடங்களாக குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.