​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாவட்ட ஆட்சியரை அசர வைத்த 8 வயது சிறுமி

Published : Jul 18, 2019 7:15 PM

மாவட்ட ஆட்சியரை அசர வைத்த 8 வயது சிறுமி

Jul 18, 2019 7:15 PM

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே மூன்றாம் வகுப்பு படிக்கும் அரசு பள்ளி மாணவி, 4 நிமிடம் 49 நொடிகளில் 150 திருக்குறள்களை ஒப்புவித்து சாதனை படைத்துள்ளார். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கல்லாங்குத்து கிராமத்தை சேர்ந்த ஆனைக்குட்டி, சத்யா தம்பதி மகள் தர்ஷினி. விவசாய குடும்பத்தில் பிறந்த தர்ஷினி, கல்லாங்குத்து பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகிறார். திருக்குறள் ஒப்புவித்தலில் சிறந்து விளங்கும் மாணவி தர்ஷினி, ஒன்றாம் வகுப்பு படிக்கும்போதே ஐந்து நிமிடத்தில் 27 திருக்குறள்களை கூறி வியக்க வைத்தார்.

இரண்டாம் வகுப்பு படித்தபோது நான்கு நிமிடத்தில் 110 திருக்குறள்களை கூறி அனைவரின் பாராட்டையும் பெற்றார். மாணவியை பள்ளி ஆசிரியர்கள் ஊக்கப்படுத்திய நிலையில், மற்றும் ஒரு சாதனையை மாணவி தர்ஷினி படைத்துள்ளார். திருக்குறளை வேகமாக ஒப்புவிக்கும் போட்டியில் பங்கேற்று உலக சாதனை படைத்துள்ளார்.

இந்த சாதனை நிகழ்ச்சி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி முன்னிலையில் நடைபெற்றது. அப்போது, மாணவி தர்ஷினி 4 நிமிடம் 49 நொடிகளில், 150 திருக்குறள்களை வேகமாக ஒப்பிவித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

திருக்குறள்களை அதிவேகமாக ஒப்புவித்த மாணவி தர்ஷினியை மாவட்ட ஆட்சியர், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் பாராட்டினர்.

மாணவியின் சாதனைக்கான சான்றிதழை வழங்கிய மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, மாணவிக்கு தங்க சங்கிலி அணிவித்து கவுரவித்தார்.

ஏழ்மையில் உள்ள தர்ஷினியின் குடும்பத்திற்கு பசுமை வீடு ஒதுக்குவதற்கான பரிந்துரை செய்தும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். உலகப் பொதுமறையான திருக்குறளை, எளிதாக கூறி ஆச்சரியப்படுத்தி வரும் அரசு பள்ளி மாணவி தர்ஷினியின் சாதனையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.