​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எதிர்காலத்தில் தமிழ்மொழி தேர்வு மொழியாக இருக்குமா? - மத்திய அரசுக்கு நீதிபதி கேள்வி

Published : Jul 18, 2019 6:37 PM

எதிர்காலத்தில் தமிழ்மொழி தேர்வு மொழியாக இருக்குமா? - மத்திய அரசுக்கு நீதிபதி கேள்வி

Jul 18, 2019 6:37 PM

தபால் துறையில் எதிர்காலத்தில் மத்திய அரசு நடத்தும் தேர்வுகளில் தமிழ் மொழியும் தேர்வு மொழியாக இருக்குமா? என்பது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தபால் துறையில் தபால்காரர், உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டும் நடத்தப்படும் என்ற அறிவிப்பை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ. எழிலரசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கு  நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில்  விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், தபால் துறை தேர்வுகளை தமிழில் எழுத அனுமதிக்காதது சட்ட விரோதமானது என்றும், இந்தி மொழி தாய்மொழியாக அல்லாத மாநிலத்தில் தேர்வு எழுதியவர்கள் இத்தகைய நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வருங்காலங்களில் மத்திய அரசு நடத்தும் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படாதவாறு தமிழ் மொழியிலும் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் எனவும் வாதிட்டார்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், தபால் துறை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக மத்திய அமைச்சர் அறிவித்திருப்பதாக தெரிவித்தார்.

வாதங்களை கேட்ட நீதிபதிகள், எதிர்காலத்தில் மத்திய அரசு நடத்தும் தேர்வுகளில் தமிழ் மொழியும் தேர்வு மொழியாக இருக்குமா? என்பது குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை 23 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.