​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விதி எண் - 110 முதலமைச்சர் அறிவிப்புகள்

Published : Jul 18, 2019 6:26 PM

விதி எண் - 110 முதலமைச்சர் அறிவிப்புகள்

Jul 18, 2019 6:26 PM

20 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் ஓசூரில் சர்வதேச மலர்கள் ஏல மையம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை சட்டப்பேரவையில் விதி எண் 110 இன் கீழ் முதலமைச்சர் வெளியிட்டார்.

சட்டப்பேரவையில் விதி எண்.110-ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நூறாண்டுகள் நிறைவு செய்யும் விழுப்புரம் நகராட்சிக்கு 50 கோடி ரூபாய் செலவில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார். தற்போது, 33.13 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடன் 42 வார்டுகளைக் கொண்டு செயல்பட்டு வரும் விழுப்புரம் நகராட்சிக்கு, அடிப்படைத் தேவைகளை மேம்படுத்திட, இந்த தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் கூறினார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிலவும் சாதகமான பருவ நிலையின் காரணமாக 39,383 மெட்ரிக் டன் மலர்கள் உற்பத்தி செய்யப்படுவதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், பெங்களூருவில் உள்ள ஏல மையம் மூலமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதை குறிப்பிட்டார்.

ஓசூரில் சர்வதேச மலர் ஏல மையம் அமைக்க வேண்டும் என கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு மாவட்ட விவசாயிகள், விற்பனையாளர்கள், மலர் ஏற்றுமதியாளர்கள் ஆகியோரிடமிருந்து வந்த கோரிக்கைகள் ஏற்கப்படுவதாக முதலமைச்சர் கூறினார்.

மனுக்கள் மீது ஒரு மாத காலத்திற்குள் தீர்வு எட்டப்படும் முதலமைச்சர் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தும் என்றும் அறிவித்தார். , சிறப்பு குறை தீர்வு திட்டம், ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.

இதன் மூலம், அனைத்து நகர்புற வார்டுகளிலும், கிராமங்களிலும் உரிய விளம்பரத்திற்கு பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவுப்படி, அலுவலர் குழு, ஆகஸ்ட் மாத இறுதிக்குள் சென்று மனுக்களைப் பெற்று ஒரு மாத காலத்திற்குள் தீர்வு எட்டப்படும்.

பழங்குடியின மக்களுக்கு வீடுகள், குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் முதற்கட்டமாக 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தித் தரப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளை முதலமைச்சர் பேரவையில் வெளியிட்டார்.