​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இன்றே சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கர்நாடக சபாநாயகருக்கு அம்மாநில ஆளுநர் அறிவுறுத்தல்

Published : Jul 18, 2019 5:13 PM

இன்றே சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கர்நாடக சபாநாயகருக்கு அம்மாநில ஆளுநர் அறிவுறுத்தல்

Jul 18, 2019 5:13 PM

கர்நாடக சட்டப்பேரவையில், முதலமைச்சர் கொண்டுவந்து நம்பிக்கையில்லா தீர்மானத்தை இன்றே நிறைவேற்ற வேண்டும், சபாநாயகரை, அம்மாநில ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். 

கர்நாடக ஆளும் காங்கிரஸ் - மதச்சார்ப்பற்ற ஜனதா தள கூட்டணி அரசுக்கு எதிராக, இருகட்சிகளையும் சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தினர். இதில், காங்கிரஸ் எம்எல்ஏ ராமலிங்க ரெட்டி தனது ராஜினாமா முடிவை வாபஸ் பெற்றார்.

இந்நிலையில், கர்நாடக சட்டப்பேரவையில், அதிருப்தி எம்எல்ஏக்கள் நீங்கலாக, பெரும்பான்மை பலத்தை முற்றாக இழந்துவிட்டிருக்கும், காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசின் முதலமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி, தனது அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை கோரினார்.

இதன்படி, கர்நாடக சட்டப்பேரவை இன்று காலை 11 மணிக்கு கூடியதும், முதல் அலுவலாக நம்பிக்கை கோரும் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்பட்டது. முதலமைச்சர் குமாரசாமி, தமது அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை தாக்கல் செய்தார்.

உடனே எதிர்க்கட்சி தலைவரான எடியூரப்பா எழுந்து, இன்றே விவாதத்தை முடித்து, நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர் மிகுந்த அவசரத்தில் உள்ளது போல் இருக்கிறது என குமாரசாமி கூறினார்.

உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை தெளிவுபடுத்தும் வகையில், அதே நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்டுப் பெறும் வரை, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவருமான சித்தராமையா கூறினார். கட்சித் தாவல் தடைச் சட்டம் குறித்து 40 நிமிடங்களுக்கு சித்தராமையா உரையாற்றினார்.

ராஜினாமா கடிதம் அளித்த 15 அதிருப்தி எம்எல்ஏக்கள், 2 சுயேச்சைகள், நாகேந்திரா மற்றும் ஸ்ரீமந்த் பாட்டீல் (Srimanth B Patil) ஆகிய 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், ஒரு பாஜக எம்எல்ஏ, ஒரு பிஎஸ்பி எம்எல்ஏ என 21 பேர் சட்டப்பேரவைக்கு வரவில்லை. உணவு இடைவேளைக்காக ஒத்திவைக்கப்பட்ட கர்நாடக சட்டப்பேரவை, பிற்பகல் மூன்று மணிக்கு கூடியது.

கொறடா உத்தரவு பிறப்பிக்க உரிமை இல்லை என்றால், எப்படி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த முடியும் என காங்கிரஸ் எம்எல்ஏ ஹெச்.கே.பாட்டீல் கேள்வி எழுப்பினார். தங்கள் கட்சியின் எம்எல்ஏ ஸ்ரீமந்த் பாட்டீலை, பெங்களூருவிலிருந்து, பாஜகவினர் கடத்திச் சென்று, மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்திருப்பதாக, அமைச்சர் சிவக்குமார் குற்றம்சாட்டினார்.

இதற்கு, எடியூரப்பா உள்ளிட்ட பாஜக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால், பேரவையில், கடும் அமளி ஏற்பட்டதால், அவை, அரை மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. 

இந்தச்சூழலில், கர்நாடக பாஜக நிர்வாகிகள், மாலை 4 மணியளவில், ஆளுநர் வாஜூபாய் வாலாவை சந்தித்துப் பேசினர். நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்த, சபாநாயகருக்கு, ஆளுநர் உத்தரவிட வேண்டும் என, பாஜகவினர் கோரிக்கை விடுத்தனர். நம்பிக்கை வாக்கெடுப்புத் தவிர மற்ற விவகாரங்கள் குறித்து, அவையில் விவாதிக்க கூடாது என்பதை, சபாநாயகருக்கு அறிவுறுத்துமாறும், ஆளுநரிடம், பாஜக நிர்வாக வலியுறுத்தினர்.

அரை மணி நேரம் ஒத்திவைக்கப்பட்ட அவை மீண்டும் கூடியது, நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தின் மீது விவாதம் தொடர்ந்து நடைபெற்றது. அப்போது, ஆளுநரிடமிருந்து வந்திருந்த கடிதத்தை சபாநாயகர் ரமேஷ் குமார், அவையில் வாசித்தார்.

அதில், முதலமைச்சர் கொண்டுவந்துள்ள நம்பிக்கை வாக்கெடுப்புத் தீர்மானத்தை இன்றே நிறைவேற்ற வேண்டும் என, ஆளுநர் அறிவுறுத்தியிருந்தார். மேலும் ஜனநாயகத்தை காப்பாற்ற, இந்த நடைமுறை அவசியமானது என்றும், கர்நாடக ஆளுநர் வாஜூபாய் வாலா சுட்டிக்காட்டியிருந்தார்.

அப்போது பேசிய பாஜக சட்டமன்ற கட்சித் தலைவர் எடியூரப்பா, நள்ளிரவு 12 மணி ஆனாலும், அவையை நடத்தி, இன்றே, நம்பிக்கை வாக்கெடுப்பை நிறைவேற்றுமாறு வலியுறுத்தினார். நம்பிக்கை வாக்கெடுப்பை தாக்கல் செய்த அன்றே நிறைவேற்றுவது தான் மரபு என்றும், எடியூரப்பா சுட்டிக்காட்டினார்.

கர்நாடக சட்டப்பேரவை மொத்தம் 225 உறுப்பினர்களை கொண்டது. ராஜினாமா முடிவில் உறுதியாக இருக்கும் 15 பேரின் ராஜினாமா ஏற்கப்பட்டால் ஆளும் கூட்டணியின் பலம் 101 ஆகக் குறைந்துவிடும். பாஜகவின் பலம் 2 சுயேச்சைகள் ஆதரவுடன், 107 ஆக உள்ளது. இந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டால், குமாரசாமி அரசு கவிழ்ந்துவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.