​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அத்திவரதரை தரிசிக்க சென்ற 4 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு

Published : Jul 18, 2019 4:25 PM

அத்திவரதரை தரிசிக்க சென்ற 4 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்பு

Jul 18, 2019 4:25 PM

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் சிலை தரிசன நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து பக்தர்களின் தரிசனத்திற்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் சிலை தரிசன விழா கடந்த 1-ஆம்தேதி  தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 48 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் 18-வது நாளான இன்று அத்திவரதர் கத்திரிப்பூ மற்றும் செண்பகப்பூ வண்ண பட்டாடை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 

கடந்த 17 நாட்களில் 21 லட்சத்து 50 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ள நிலையில் இன்று, பக்தர்களின் கூட்டம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது.

சந்திரகிரணகம் என்பதால் நேற்று தரிசனத்திற்கு அனுமதி இல்லாத நிலையில், சுமார் இரண்டு லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்காக திரண்டனர்.

இதனால் 4 மாட வீதிகள், செட்டித்தெரு, அண்ணா தெரு ஆகிய வீதிகளை கடந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்களின் வரிசை நீண்டிருந்தது. மதியம் மூன்று மணி நிலவரப்படி ஒன்றரை லட்சம் பேர் தரிசனம் செய்திருந்தனர். 

நேரம் செல்லசெல்ல பக்தர்களின் கூட்டம் அதிகரித்த நிலையில் , மேற்கு ராஜகோபுர வாயில் வழியாக தரிசனம் முடிந்து பக்தர்கள் வெளியேறிக் கொண்டிருந்தனர். மாலை 5 மணி அளவில் மேற்கு கோபுர வாயிலில் கூட்ட நெரிசல் அதிகரித்தது. வெளியேறும் வழியில் ஒருவரை, ஒருவர் முந்திக் கொண்டு செல்ல முயன்றதால் நெரிசல் ஏற்பட்டது. 

கூட்ட நெரிசலில் சிக்கி சென்னையை சேர்ந்த நடராஜன், சேலத்தை சேர்ந்த ஆனந்தன், சென்னையை அடுத்த  ஆவடியை சேர்ந்த நாராயணி, ஆந்திர மாநிலம் குண்டூரையைச் சேர்ந்த கங்கா லட்சுமி உள்ளிட்ட பலர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து அவர்களுக்கு கோவில் வளாகத்தில் உள்ள தற்காலிக மருத்துவமனையில் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்களை உடனடியாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு செல்லும் வழியில் இருவரும், மருத்துவமனையில் இருவரும் உயிரிழந்தனர்.

உயிரிழந்த நடராஜன், ஆனந்தன்,  நாராயணி, கங்கா லட்சுமி ஆகிய நான்கு பேரும் ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்கள். பலமணி நேரம் கூட்டத்தில் காத்திருந்து தரிசனம் செய்ததால்  களைப்பு ஏற்பட்ட நிலையில், கூட்ட நெரிசலிலும் சிக்கியதால் அவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து விசாரிக்க குழு அமைத்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார். 

பகல் நேரத்தில் வெயிலின் தாக்கத்தில் இருந்து பக்தர்களை காக்க ஏற்கனவே நிழல் கூரை அமைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய மாவட்ட ஆட்சியர், கூடுதலாக நிழல் கூரைகள் அமைக்கப்படும் என்றார்.

பிரதமர் மோடி தரிசிக்க வர உள்ளதாக பரவும் வதந்தி குறித்த கேள்விக்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சியர், இது குறித்து இதுவரை அதிகாரப்பூர்மாக எந்த தகவலும் இல்லை என்றார்.

இதுபோன்ற வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இந்நிலையில் கோவிலில் நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.

இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நான்கு பேர் உயிரிழந்த து குறித்தும், மேலும் பலர்  மயக்கமடைந்த து குறித்தும் அதிகாரிகளிடம் உரிய பதிலை பெற்று அவைக்கு தெரிவிக்கப்படும் என்றார்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதரை தரிசிக்க நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வழக்கமாக சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை தினங்களில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. ஆனால் வார நாளான இன்று வழக்கத்தை விட அதிக அளவில் கூட்டம் திரண்டது.

இன்று பெருமாளுக்கு உரிய திருவோண நட்சத்திர நாளாகும். இந்த நாளில் பெருமாளை சேவித்தால் எல்லா நலமும் கூடும் என்பது பக்தர்களின் நீண்டகால நம்பிக்கை. வழக்கமாகவே திருவோண நட்சத்திர நாளில் பெருமாள்கோவில்களில் கூட்டம் அதிகரித்து காணப்படும்.

அதிலும் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே காட்சி தரும் அத்திவரதரை, திருவோண நட்சத்திர நாளில் தரிசிப்பது கூடுதல் விசேசம் என்பதாலேயே வழக்கத்தை விட மிக அதிக அளவில் பக்தர்கள் கூடியதாக கோவில் பட்டாச்சார்யார்கள் தெரிவித்துள்ளனர்.

தரிசனம் முடித்து திரும்பும் போது, வரிசை இன்றி, ஒருவரை ஒருவர் முண்டியடித்துக் கொண்டு வெளியேற முயன்றதே நெரிசலுக்கு காரணமாகி உள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதனிடையே உயிரிழந்த நான்கு பேரின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பேருக்கு மேல் பக்தர்கள் தரிசிக்க வருவதாகவும், பக்தர்கள் தரிசிக்க நிழற்கூரைகள் அமைத்தும், குடிநீர் வழங்கியும், மருத்துவ வசதிகள் செய்தும் அரசு ஏற்பாடு செய்துள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்துள்ளதால், இரவு 7 மணிக்கு மேல் காஞ்சிபுரத்திற்கு வந்த வெளியூர் வாகனங்களை ஊருக்கு வெளியிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர்.

காஞ்சிபுரத்தில் குவிந்துள்ள பக்தர்கள் தரிசனம் முடிந்து வெளியே செல்லும் வரை, கூடுதல் பக்தர்கள் ஊருக்குள் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.

இதே போல தரிசனத்திற்காக கோவிலுக்குள் வந்த பக்தர்கள் அனைவரும் தரிசிக்கும் வகையிலும் , தரிசனம் முடித்து செல்வோர், நெரிசல் இன்றி செல்லும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன.