திருவண்ணாமலை அருகே, கணித பாடம் முறையாக செய்யவில்லை எனக் கூறி பள்ளி மாணவனை பிரம்பால் தாக்கிய ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்குமாறு மாணவனின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
துர்க்கைநம்மியந்தல் பகுதியைச் சேர்ந்த சூர்யபிரகாஷ் என்ற மாணவன் அங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்துவருகிறான். இந்நிலையில் அம்மாணவன் கணித பாடத்தை சரியாக செய்யவில்லை எனக்கூறி கணித ஆசிரியையான உஷா என்பவர், பிரம்பால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் முதுகு உள்ளிட்ட பகுதிகளில் சூர்ய பிரகாசுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தனது மகனை அடித்த ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள மாணவனின் பெற்றோர், அதுவரை மாணவனை பள்ளிக்கு அனுப்பப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளனர். இதனிடையே இவ்விவகாரம் குறித்து ஆசிரியையிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் மாவட்ட கல்வி அலுவலர், தெரிவித்துள்ளார். ஆசிரியை உஷா, ஏற்கெனவே இரண்டு மாணவர்களை அடித்த புகாரில் துறைரீதியான நடவடிக்கைக்கு ஆளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.