​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை சென்ட்ரலில் காணாமல் போன குழந்தை திருப்போரூரில் கண்டுபிடிப்பு

Published : Jul 16, 2019 10:04 AM



சென்னை சென்ட்ரலில் காணாமல் போன குழந்தை திருப்போரூரில் கண்டுபிடிப்பு

Jul 16, 2019 10:04 AM

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட ஒடிசா மாநில தம்பதியின் 3 வயது ஆண் குழந்தை திருப்போரூரில் கண்டுபிடிக்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடத்தலில் ஈடுபட்ட ஓடிசாவை சேர்ந்த நபரை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வைத்து ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.

ஒடிசாவைச் சேர்ந்த ராம்சிங் - நீலாவதி தம்பதியர், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஞாயிற்று கிழமை இரவு தங்களது 3 வயது ஆண் குழந்தை சோம்நாத்துடன் ரயிலுக்காக காத்திருந்தனர். அப்போது உறங்கிவிட்ட அவர்கள் கண் விழித்து பார்த்த போது தங்கள் குழந்தை மாயமானதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பான புகாரின் பேரில் சென்ட்ரல் ரயில்வே போலீசார் அங்குள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்த போது, குழந்தையை ஒரு நபர் கடத்திச் சென்றது தெளிவாக பதிவாகி இருந்தது.

இது குறித்து ரயில்வே போலீசாரின் வாட்ஸ் அப் குரூப்பிற்கு குழந்தையை கடத்தி சென்ற நபரின் சிசிடிவி காட்சியை அனுப்பி வைத்து அனைத்து நிலைய ரயில்வே போலீசாரும் உஷார் படுத்தப்பட்டனர். மேலும் குழந்தையை கடத்திய நபர் தப்பிச் செல்லக் கூடிய முக்கிய ரயில் நிலையங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, அந்த கடத்தல்காரன் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் தாம்பரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ரயில்வே தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பரங்கிமலையில் உள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் கடத்தப்பட்ட குழந்தை இருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்தனர். ராம்சிங் - நீலாவதி தம்பதியரை அங்கு அழைத்து சென்று விசாரித்த போது, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடத்தப்பட்ட மூன்று வயது ஆண் குழந்தை என்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து செங்கல்பட்டில் உள்ள குழந்தைகள் நல குழுமத்திற்கு பெற்றோருடன் அழைத்து செல்லப்பட்டு குழந்தை ஆஜர்படுத்தப்பட்டது. சட்டரீதியான விசாரணைகளுக்கு பிறகு மூன்று வயது குழந்தை பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. திருப்போரூர் பேருந்து நிலையத்தில் கடத்தல்காரனால் விட்டுசெல்லப்பட்ட குழந்தையை சிலர் மீட்டு பரங்கிமலை குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்து சென்றது தெரியவந்துள்ளது.

இதற்கிடையே குழந்தையை திருப்போரூர் பேருந்து நிலையத்தில் விட்டு சென்ற கடத்தல்காரனின் புகைப்படங்களை வைத்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், ரயில் ஏறி தப்பி செல்ல வந்த அவனை மடக்கி பிடித்தனர்.

பின்னர் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட அவன் கைது செய்யப்பட்டான். சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் வைத்து அவனிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குழந்தை கடத்தலில் ஈடுபட்ட நபர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கோபிரெட்டி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனிடையே சென்னை சென்ட்ரலில் செய்தியாளர்களை சந்தித்த ரயில்வே டிஎஸ்பி முருகன், கடத்தப்பட்ட குழந்தை எவ்வாறு மீட்கப்பட்டது என்பதை விளக்கினார்.