​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய மழை...

Published : Jul 16, 2019 8:04 AM

சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெளுத்து வாங்கிய மழை...

Jul 16, 2019 8:04 AM

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக பலத்த மழை பெய்துள்ளது. 

வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை இடியுடன் பலத்தமழை பெய்தது. நள்ளிரவில் புறநகர்ப் பகுதிகளிலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது.

சென்னை கோட்டூர்புரம் பகுதியில் காந்திமண்டபம் அருகே அதிகாலையில் பெரிய மரம் ஒன்று சாலையில் விழுந்தது. அங்கு விரைந்த தீயணைப்புத்துறையினரும், போலீசாரும் விரைந்து சென்று மரத்தை அகற்றினர்.

காஞ்சிபுரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், திடீரென காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. வேலூர் மாவட்டம், திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, ஜோலார்பேட்டை ஆகிய பகுதிகளில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில் திடீரென மழை பெய்தது.

நெய்வேலி, வேலூர், வந்தவாசி, திருவள்ளூர், ஈரோடு, எடப்பாடி ஆகிய இடங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது. இதனிடையே, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகள் உள்பட 8 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

வட தமிழகத்தில் இன்றும் நாளையும் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

நேற்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக கனமழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் 10 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

சென்னை கொரட்டூர் சத்யபாமா பல்கலைக்கழகத்தில் 7 சென்டிமீட்டர் மழையும், திருத்தணியில் 6 சென்டிமீட்டர் மழையும், அண்ணா பல்கலைக்கழகத்தில் 5 சென்டிமீட்டர் மழையும், நுங்கம்பாக்கத்தில் 3 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.