​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முதலமைச்சர் தங்களை கொச்சைப்படுத்திவிட்டதாக திமுக வெளிநடப்பு

Published : Jul 15, 2019 1:29 PM

முதலமைச்சர் தங்களை கொச்சைப்படுத்திவிட்டதாக திமுக வெளிநடப்பு

Jul 15, 2019 1:29 PM

தபால்துறை தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்ட விவகாரத்தில் ஒரு முடிவு எட்டப்படுகிற வரை, தமிழக அரசு தொடர்ந்து போராடும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக காரசாரமான விவாதம் நடைபெற்ற நிலையில், திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

தபால் துறை போட்டித்தேர்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்ட விவகாரம் குறித்து, பேரவையில் திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.

தமிழர்கள் மத்திய அரசுப் பணிகளில் சேர்ந்துவிடக்கூடாது என திட்டமிட்டு மத்திய அரசு செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டினார். தபால் துறை போட்டித்தேர்வில் தமிழ் மொழியை மீண்டும் சேர்க்க மாநில அரசு, மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். மேலும் இது குறித்து தமிழக சட்டப்பேரவையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் தங்கம் தென்னரசு வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தபால் துறை சார்பில் நடைபெற்ற தேர்வில் தாள் ஒன்றில் மட்டுமே தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும், தாள் இரண்டில் எந்த பிரச்சனையும் இல்லை எனவும் தெரிவித்தார். மேலும் இரு மொழி கொள்கையை பின்பற்றும் தமிழக அரசு, இந்த விவகாரம் குறித்து நிச்சயம் மத்திய அரசை வலியுறுத்தும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.

பின்னர் பேசிய எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், இரு மொழி கொள்கையில் ஒருமித்த கருத்து கொண்டிருக்கும் நிலையில், மத்திய அரசை வலியுறுத்தி தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றுமா என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் திமுகவும், அதிமுகவும் சேர்ந்தே குரல் எழுப்புவோம், தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டுவோம் என பதிலளித்தார்.

பின்னர் பேசிய துரைமுருகன், நமது எம்.பி.க்கள் நிச்சயம் குரல் எழுப்புவார்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை, ஆனால் தமிழக அரசு மத்திய அரசை கண்டித்து ஏன் தீர்மானம் நிறைவேற்ற கூடாது என மீண்டும் கேள்வி எழுப்பினார். அப்போது குறுக்கிட்டு பேசிய துணை முதலமைச்சர், இந்த விவகாரம் குறித்து நாளை நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் கேள்வி எழுப்ப இருக்கிறார்கள் என்றார்.

இதற்கு மத்திய அரசு கொடுக்கும் பதிலை பொறுத்து நாம் கலந்து ஆலோசித்து முடிவெடுப்போம் எனவும் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார். அவரை தொடர்ந்து பேசிய முதலமைச்சர், திமுக இந்த விவகாரத்தில் வெளிநடப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு பேசி வருவதாகவும், நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அளிக்கும் பதிலைப் பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

பின்னர் பேசிய துரைமுருகன், தாங்கள் உணர்வோடு இந்த விவகாரம் குறித்து பேசுவதாகவும், ஆனால் திமுகவை கொச்சைப்படுத்தும் வகையில் முதலமைச்சர் பேசியதால் அதனை கண்டித்து வெளிநடப்பு செய்வதாகவும் கூறினார். அதனை தொடர்ந்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். இதைத் தொடர்ந்து பேரவையில் மீண்டும் பேசிய முதலமைச்சர், திமுகவினர் வெளிநடப்பு செய்ய காரணத்தை தேடித்தேடி பார்த்ததாகவும், எதுவும் கிடைக்காததால், இந்த விவகாரத்தை ஒரு சாக்காக எடுத்துக்கொண்டு வெளிநடப்பு செய்துள்ளதாகவும் விமர்சித்தார்.

தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சட்டமன்ற உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்வதாக அறிவித்தனர். இறுதியாக பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், மத்திய அரசின் நிலைப்பாட்டை பொறுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சொல்லப்பட்டதே தவிர, மத்திய அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற மாட்டோம் என எந்த இடத்திலும் சொல்லவில்லை என தெரிவித்தார். எதையாவது செய்து மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே சிக்கலை உருவாக்கி அதில் குளிர் காய திமுக நினைப்பதாகவும், அது ஒரு போதும் நடக்காது எனவும் சி.வி.சண்முகம் கூறினார்.