​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது? - உச்சநீதிமன்றத்தில் வழக்கு

Published : Jul 15, 2019 11:22 AM



தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது? - உச்சநீதிமன்றத்தில் வழக்கு

Jul 15, 2019 11:22 AM

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு அக்டோபர் 31ஆம் தேதி வரை அவகாசம் வழங்குமாறு, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் மாநில தேர்தல் ஆணையம் கேட்டுள்ளது. 

தமிழகத்தில் உடனடியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி, திமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த மே மாதத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழக தேர்தல் ஆணையம் 3 மாதம் அவகாசம் கேட்டது.

இந்த வழக்கு நாளை மறுநாள் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில், அவகாசம் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணிகளும், தேர்தல் ஏற்பாடுகளும் எதிர்பார்த்ததைக் காட்டிலும் குறைவான வேகத்தில் நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது,. ஜூலை 9ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆலோசனையின் போது, தண்ணீர் பிரச்சனை காரணமாகவே தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது தெரிய வந்ததாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

தண்ணீர் விநியோகம் தொடர்பான பிரச்சனைகளை சமாளிக்கும் பணியில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளதால் தேர்தல் பணிகளில் தொய்வு அடைந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. எனவே மேலும் 60 நாட்கள் அவகாசம் அளிக்குமாறு மாநில தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி, அக்டோபர் மாத இறுதியில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.