​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரேஷன் கடை போல் கியூ.. வீட்டுக்கு 2 குடம் தண்ணீர்..!

Published : Jul 14, 2019 6:06 PM



ரேஷன் கடை போல் கியூ.. வீட்டுக்கு 2 குடம் தண்ணீர்..!

Jul 14, 2019 6:06 PM

திருவண்ணாமலை மாவட்டத்தில், குடிநீர் தட்டுப்பாடு காரணமாக, ரேஷன் முறையில் வீட்டுக்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் வழங்கப்படுவதுடன், பெண்கள் சண்டையிடுவதை தவிர்க்க, கட்டையால் தடுப்பு அமைத்து வரிசையில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

பருவ மழை பொய்த்துப்போனதால் எங்கும் குடிநீருக்கு தட்டுப்பாடு... பிரச்சினை திருவண்ணாமலை மாவட்டத்தையும் விட்டு வைக்கவில்லை... குடிநீருக்காக ஏங்கும் கிராமம் தான் வேடந்தவாடி. இங்கு ஆயிரத்து 200 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், நீராதாரமாக உள்ள திறந்தவெளிகிணறு வற்றியதால், ஏரியில் ஆழ்துளை கிணறு அமைத்து, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நிரப்பி, குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

அந்த தண்ணீரைப் பிடிக்கவும், பெண்கள் போட்டிபோட்டு, முண்டியடிப்பதால் அடிக்கடி தகராறு....பிரச்சனை...என ஏற்பட்டதால், குடிநீர் விநியோகம் செய்ய முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. கடைசியில் வருபவர்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் போவதை தவிர்க்க ரேஷன் முறையில் வீட்டுக்கு இரண்டு குடம் வீதம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

அப்போதும் கூட்ட நெரிசல் ஏற்படவே, அதை தவிர்க்க வீட்டுக்கு ஒருவர் மட்டுமே வரவேண்டும் என்றும், குறுக்கே புகுந்து தண்ணீர் பிடிப்பதை தடுக்க, கோவிலில் சாமி கும்பிடச் செல்வது போல், ஒருவர் மட்டுமே செல்லகூடிய வகையில், தடுப்பு கட்டைகள் அமைத்து, வரிசையில் அனுமதிக்கப்படுகிறார்கள்.

அதன் பின்பு தண்ணீர் இருந்தால் சுழற்சி முறையில் அடுத்த ரவுண்டு தண்ணீர் விடப்படும். இது பிரச்சினை இல்லாத வகையில் குடிநீர் பிடிக்க வசதியாக இருந்தாலும், கைக் குழந்தையுடன் வருவோர், முதியோர், கர்ப்பிணிகள், பள்ளி,கல்லூரி செல்லும் மாணவர்களும், குடங்களை கையில் ஏந்தியவாறு, 4 மணி நேரம் காத்திருந்து தண்ணீர் பிடிக்க வேண்டிய நிலை ஏற்படுவதாகவும், இதனால் மற்ற பணிகள் பாதிக்கப்படுவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும், கண்டு கொள்வதில்லை எனவும், மாவட்ட நிர்வாகம் கூடுதலாக ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து, தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.