​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
14-வது நாளாக அத்திவரதர் தரிசனம்

Published : Jul 14, 2019 5:51 PM

14-வது நாளாக அத்திவரதர் தரிசனம்

Jul 14, 2019 5:51 PM

காஞ்சிபுரத்தில் அத்திவரதரை மாலை வரை 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்தனர். இதனிடையே  இரவு 11 மணிவரை என அறிவிக்கப்பட்ட தரிசன நேரம் 9 மணிவரை என குறைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவிலில் 14-வது நாளான இன்று அத்திவரதருக்கு நீல நிற பட்டாடையில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பெருமாளுக்கு உகந்த ஏகாதசியும், விடுமுறை நாளுமான நேற்று நள்ளிரவு 1 மணி வரை 2 லட்சத்து 80 ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர்.

இன்று அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில் இன்று ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரிசையில் நிற்பவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே குடிநீர் வழங்கப்பட்டது. வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீல் சேர் மூலம் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே காலை 5 மணியிலிருந்து இரவு 11 மணிவரை தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் கோயில் வளாகம் தூய்மைப்பணி மற்றும் சுவாமி அலங்காரத்துக்கு நேரம் போதாத காரணத்தால் இரவு 9 மணி வரை மட்டுமே தரிசனம் அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு 9 மணிக்கு கோபுர வாசல்கள் அடைக்கப்பட்டு, கோவில் வளாகத்துக்குள் இருப்பவர்கள் மட்டும் இரவு 11 மணி வரை தரிசனம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் பொன்னையா, முதியோர்கள் கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் விடுமுறை நாட்களைத் தவிர்த்து வார நாட்களில் தரிசனம் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். கட்டண தரிசனம் இனி கிடையாது என்றும் அவர் தெரிவித்தார். சிலர் போலி அனுமதிச் சீட்டு எடுத்து வந்தது தொடர்பாக 7 வழக்குகள் பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.