​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தீவிரவாத தொடர்பு? - இருவர் கைது

Published : Jul 14, 2019 4:54 PM



தீவிரவாத தொடர்பு? - இருவர் கைது

Jul 14, 2019 4:54 PM

தீவிரவாத இயக்கங்களுக்கு நிதி உதவி செய்ததாக நாகையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இரண்டு பேரும், நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். 

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளுடன், தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த சிலருக்கு தொடர்பு உள்ளதாக அந்நாட்டு உளவுத்துறை கூறியது. இதை அடுத்து கொச்சியில் முகாமிட்டு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, மதுரை, கோவை, நாகை ஆகிய இடங்களில் பலரது வீடுகள், அலுவலகங்களில் அவர்கள் சோதனை மேற்கொண்டனர்.

சனிக்கிழமை அன்று சென்னை மண்ணடி, புரசைவாக்கம் மற்றும் நாகை மஞ்சக்கொல்லை, சிக்கல் ஆகிய ஊர்களில், அதிகாரிகள் சோதனை நடத்தினர். நாகையில் நடந்த சோதனையில், ஹாரிஸ் முகமது, அசன் அலி ஆகியோரது வீடுகளில் இருந்து செல்போன்கள், சிம் கார்டுகள், மெமரி கார்டுகள், மடிக்கணினிகள், ஹார்ட் டிஸ்குகள், பென் டிரைவ்கள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

தொடர்ந்து ஹாரிஸ் முஹம்மது, அசன் அலி ஆகியோரை பிடித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து நள்ளிரவு வரை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்குப் பின்னர் இருவரையும் கைது செய்த அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அவர்களை சென்னை கொண்டு வந்தனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், எழும்பூர் தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்ற நீதிபதி செந்தூர்பாண்டியன் முன் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

அவர்களை 25ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிடவே புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் இருவரும் அன்சாருல்லா என்ற அமைப்பை உருவாக்கி இளைஞர்களை மூளைச் சலவை செய்து அமைப்பில் சேர்த்ததுடன், நிதி வசூலித்து பயங்கரவாத அமைப்புகளுக்கு வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டிருந்ததாக அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனிடையே மண்ணடி, புரசைவாக்கத்தில் நடந்த சோதனை தொடர்பாக வக்தே இஸ்லாமிக் ஹிண்ட் என்ற அமைப்பின் மாநில தலைவர் சையது முகமது புகாரி மற்றும் இஸ்மாயில் ஆகியோரை கிண்டியில் உள்ள அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு, தேசிய புலனாய்வு முகமை சம்மன் அனுப்பி உள்ளது.