​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அச்சுறுத்தும் தண்ணீர் தட்டுப்பாடு மத்திய அரசு புதிய திட்டம்

Published : Jul 09, 2019 7:35 PM

அச்சுறுத்தும் தண்ணீர் தட்டுப்பாடு மத்திய அரசு புதிய திட்டம்

Jul 09, 2019 7:35 PM

சென்னை உள்ளிட்ட நாட்டின் 21 முக்கிய நகரங்களில் அடுத்த ஆண்டில் நிலத்தடி  நீர் இல்லாத நிலை உருவாகும் என்பதால் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு முக்கிய முடிவை எடுத்து உள்ளது. கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்களை அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் பிரச்சனை தமிழகத்திற்கு மட்டுமல்ல நாட்டிற்கே தலைவலியாகி உள்ளது. அடுத்த ஆண்டில் சென்னை உள்ளிட்ட 21 முக்கிய நகரங்களில் நிலத்தடி நீர்மட்டம் இல்லாத நிலை உருவாகும் என்று நிதி ஆயோக் அமைப்பு எச்சரித்து உள்ளது. சர்வதேச அளவிலான நிலத்தடி நீர்மட்டம் குறித்த ஐ.நா சபையின் பட்டியலில் மொத்தமுள்ள 122 நாடுகளில் இந்தியா 120 வது இடத்தில் உள்ளதை நிதி ஆயோக் சுட்டிக்காட்டி உள்ளது. நாட்டில் 75 சதவிகித வீடுகளுக்கு குடிநீர் வெளியில் இருந்து வர வேண்டியது உள்ளதையும், 84 சதவிகித கிராமப்புற வீடுகளுக்கு இன்னமும் குழாய் மூலம் குடிநீர் வினியோகம் இல்லை என்பதையும், நாட்டில் சரிபாதி மக்கள் தொகையான 60 கோடி பேர் தண்ணீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதையும் நிதி ஆயோக் பட்டியலிட்டு உள்ளது.

இதையடுத்து தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க உரிய வழிவகைகளை கண்டறியுமாறும், 2024 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்கும் திட்டத்தை நிறைவேற்ற வழிவகை காணுமாறும் நிதி ஆயோக்கிற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக  மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்துடன் கை கோர்த்துள்ள நிதி ஆயோக், கடல் நீரை குடிநீராக்கும் திட்டங்களை செயல்படுத்தலாம் என்று ஆலோசனை கூறியுள்ளது.

தண்ணீர் தட்டுப்பாட்டை எதிர்கொண்ட இஸ்ரேல், கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் 70 சதவிகித தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதை நிதி ஆயோக் சுட்டிக் காட்டி உள்ளது. மேலும் 7800 கிலோ மீட்டர் நீளமுள்ள பெரும் கடற்கரையை கொண்ட இந்தியாவில் கடல் நீரை குடிநீராக்கினால் 60 கோடி பேரின் தாகம் தீர்க்க முடியும் என்றும் நிதி ஆயோக் கூறியுள்ளது.

இந்த திட்டத்தை நிறைவேற்ற கடலில் மிதக்கும் நீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்கலாம் என்ற யோசனை முன் வைக்கப்பட்டுள்ளது. 1.63 மில்லியன் சதுர கடல் பரப்பை இந்தியா தன்வசம் கொண்டுள்ளதால், மிதக்கும் சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பதன் மூலம், நிலம் கையகப்படுத்தும் சிக்கலை தவிர்க்க முடியுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் சுத்திகரிப்பு நிலையங்களை சூரிய சக்தி அல்லது அலையின் ஆற்றலால் மின் உற்பத்தி செய்யும் வகையில் வடிவமைத்தால், சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும் என்றும் நிதி ஆயோக் கூறியுள்ளது.

இதையடுத்து கடல்நீரை குடிநீராக்க உதவும் சிக்கனமான திட்டத்தை வடிவமைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நிதி ஆயோக்கும் , மத்திய அரசின் ஜல்சக்தி துறையும் திட்டங்களை வடிவமைக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளன. அடுத்த சில வாரங்களில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்று மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன.