​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆட்டோ ஓட்டுநரின் அலட்சியத்தால் பறிபோன உயிர்

Published : Jul 09, 2019 1:24 PM

ஆட்டோ ஓட்டுநரின் அலட்சியத்தால் பறிபோன உயிர்

Jul 09, 2019 1:24 PM

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் ஷேர் ஆட்டோவின் ஓட்டுநர் இருக்கையில் அமர்த்தி அழைத்துச் செல்லப்பட்ட 2ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி, தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விதிமுறைகளை மீறும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆம்பூர் மல்லிகைத் தோப்பு பகுதியைச் சேர்ந்த முனியசாமி என்பவரது மகள் திவ்யகரசி, நாகேஸ்வரன் கோவில் பகுதியிலுள்ள இந்து ஆரம்பப்பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்தார். திவ்யகரசியும் அவரது சகோதரன் லோகேஷ்வரனும் கார்த்திக் என்பவனது ஷேர் ஆட்டோவில் மற்ற குழந்தைகளோடு பள்ளிக்குச் செல்வது வழக்கம்.

காலை 15 குழந்தைகளை தனது ஆட்டோவில் திணித்துக்கொண்ட கார்த்திக், திவ்யகரசியை ஓட்டுநர் இருக்கையின் ஒரு ஓரத்தில் அமரவைத்து அழைத்துச் சென்றுள்ளான். பள்ளி செல்லும் வழியில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்துக்காக குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதற்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் ஆட்டோ ஏறி இறங்கி ஆடி அசைந்து சென்றிருக்கிறது. அவ்வாறு செல்லும்போது ஓட்டுநர் இருக்கையின் ஓரத்தில் அமர்ந்திருந்த குழந்தை திவ்யகரசி, பிடிமானத்தை இழந்து கீழே விழுந்துள்ளார்.

இதில் படுகாயமடைந்த குழந்தை, மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். மருத்துவமனையில் குழந்தையின் சடலத்தைப் பார்த்து அவரது பெற்றோர் கதறிய காட்சி காண்போரை வேதனையில் ஆழ்த்தியது.

விதிமுறைகளை மீறி ஆட்டோவில் அதிக குழந்தைகளை அழைத்துச் சென்று சிறுமியின் இறப்புக்குக் காரணமான ஆட்டோ ஓட்டுநர் கார்த்திக் கைது செய்யப்பட்டான். 

ஆட்டோவில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் பயணிகளை அதிலும் குறிப்பாக குழந்தைகளை ஏற்றக்கூடாது என எவ்வளவுதான் அறிவுறுத்தினாலும் பேராசை பிடித்த சிலர் அதனை மதிப்பதோ, கடைபிடிப்பதோ இல்லை. இதனால் ஏராளமான உயிரிழப்புகளும் உறுப்புகளை இழக்கும் நிலையும் ஏற்படுகிறது. இதுபோன்ற ஓட்டுநர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளும் அவர்களை கண்டுகொள்வதில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

குழந்தைகளை ஆட்டோவில் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோரும் அவர்கள் எவ்வாறு அழைத்துச் செல்லப்படுகின்றனர் என்பதை கண்காணிக்கவில்லை என்றால் இது போன்ற பேரிழப்புகள் ஏற்படும் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணமாகியுள்ளது. எனவே குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் குழந்தைகளை ஏற்றிக்கொண்ட ஆட்டோவில் மேற்கொண்டு தங்கள் குழந்தைகளை ஏற்றி அனுப்புவதை பெற்றோரும் தவிர்க்க வேண்டும்..