​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாணவிகளை அலைக்கழித்த அரசு பேருந்து பதிலடி கொடுத்த கிராம மக்கள்

Published : Jul 09, 2019 9:37 AM



மாணவிகளை அலைக்கழித்த அரசு பேருந்து பதிலடி கொடுத்த கிராம மக்கள்

Jul 09, 2019 9:37 AM

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அரசுப் பேருந்தில் ஏறிய பள்ளி மாணவிகள், தங்களது ஊரில் இறக்கி விடப்படாமல், பழனியில் இறக்கி விடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிள்ளைகளைக் காணாது துடித்த பெற்றோர் சாலைமறியலில் ஈடுபட்டதை தொடர்ந்து அந்த மாணவிகள் மீண்டும் அதே பேருந்தில் அழைத்துவரப்பட்டனர்.

தாராபுரம் அருகே மங்களாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 4 மாணவிகள், தாராபுரத்தில் உள்ள புனித அலோசியஸ் பள்ளியில் படிக்கின்றனர். அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை கோகிலா என்பவருடன் மாணவர்கள் நேற்று மாலை பள்ளி முடிந்து ஊர் திரும்ப அரசுப் பேருந்தில் ஏறியுள்ளனர்.

அந்தப் பேருந்தில் இப்ராகிம் என்பவர் ஓட்டுநராகவும், ராம்நாத் என்பவர் நடத்துனராகவும் பணியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

மங்களாம்பாளையம் ஊரை நெருங்கிய போது பேருந்தை நிறுத்துமாறு மாணவிகளும், ஆசிரியரும் கூச்சல் போட்டதாகவும், ஆனால் அதிக சத்தத்துடன் பாடலை கேட்ட படி ஓட்டுநரும், நடத்துநரும் அவர்களை கண்டுகொள்ளவில்லை என்று புகார் சொல்லப்படுகிறது.

6 கிலோ மீட்டர் தொலைவில் பேருந்தை நிறுத்தி மாணவிகளையும் ஆசிரியையும் நடத்துநர் இறங்கச் சொன்னதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆனால் அங்கு இறங்கினாலும், பேருந்துகள் நிற்காது என்ற காரணத்தால், பழனிக்குச் சென்றனர்.

வழக்கமான நேரத்தில் மாணவிகள் வீடு திரும்பாத நிலையில் பேருந்தை நிறுத்தாமல் பிள்ளைகளை பழனிக்கு கொண்டு சென்ற பேருந்து ஓட்டுனர், நடத்துனரின் செயல் அறிந்து கலங்கிப் போன பெற்றோரும் ஊர் மக்களும், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து அங்கு சென்ற போலீசாரும், போக்குவரத்து கழக அதிகாரிகளும் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

அதே பேருந்தில் மாணவிகளையும் ஆசிரியையும் திருப்பி அழைத்து வர போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உத்தரவிட்டதை அடுத்து, இரண்டரை மணி நேரத்திற்குப் பின் அவர்கள் ஊர் வந்து சேர்ந்தனர்.

மாணவிகள் ஊர் வந்து சேர்ந்ததும் அவர்களை கட்டுத் தழுவி கண்ணீர் விட்டு அழுதனர்.

அனைத்து பேருந்துகளும் தங்களது கிராமத்தில் நின்று செல்லவேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவை கிராம மக்கள் சுட்டிக் காட்டினர்.

இதைத் தொடர்ந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.