​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பக்குவமற்ற வயதில் வந்த காதலும் - பரிதாப முடிவும்

Published : Jul 09, 2019 7:23 AM



பக்குவமற்ற வயதில் வந்த காதலும் - பரிதாப முடிவும்

Jul 09, 2019 7:23 AM

சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே பெற்றோரை எதிர்த்து காதலன் வீட்டில் வந்து திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்ந்து வந்த 18 வயது இளம்பெண், காதலனின் மதுபோதை சுயரூபம் தெரியவந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். 

நந்தம்பாக்கத்தைச் சேர்ந்த சீதா என்ற 18 வயது இளம்பெண், சிறுகளத்தூரைச் சேர்ந்த 19 வயதான அரிகிருஷ்ணன் என்பவனை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் சீதா வீட்டுக்குத் தெரியவரவே அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து வீட்டை விட்டு வெளியேறிய சீதா, காதலன் அரிகிருஷ்ணன் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளார். 18 வயதுகூட பூர்த்தியடையாத சீதாவுக்கு அறிவுரை கூறி பெற்றோரிடம் அவரை ஒப்படைத்திருக்க வேண்டிய அரிகிருஷ்ணனின் பெற்றோரும் எவ்வித எதிர்ப்பும் சொல்லாமல் இருவரையும் வீட்டில் அனுமதித்துள்ளனர்.

விரைவில் திருமணம் செய்துகொள்ளலாம் எனக் கூறி சீதாவுடன் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்துள்ளான் அரிகிருஷ்ணன். வேலைவெட்டிக்குச் செல்லாமல் ஊரைச் சுற்றி வந்த அரிகிருஷ்ணனின் மற்றொரு முகம் சில நாட்கள் கழித்தே சீதாவுக்குத் தெரியவந்துள்ளது. கஞ்சாவுக்கும் மதுவுக்கும் அடிமையான அவன், எப்போதும் வீட்டுக்கு போதையிலேயே வருவதும் சீதாவை அடித்துத் துன்புறுத்துவதுமாக இருந்துள்ளான்.

இதனை எதிர்பார்க்காத சீதா, போதைப் பழக்கத்தை கைவிடக் கோரி அரிகிருஷ்ணனோடு 2 மாதங்களாக போராடியுள்ளார். ஆனால் எதற்கும் மசியாத அரிகிருஷ்ணன், தனது அட்டகாசத்தை தொடர்ந்து அரங்கேற்றி வந்துள்ளான். அவனுடைய பெற்றோரும் இதுகுறித்து கண்டுகொள்ளாததால் நொந்துபோன சீதா, மீண்டும் தனது வீட்டுக்குச் செல்லவும் துணிவின்றி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சீதாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து, அரிகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். கைதாகும்போதுகூட அவன் சுயநினைவின்றி போதையில் இருந்ததாக போலீசார் கூறுகின்றனர்.

ஆண் பிள்ளையாக இருந்தாலும் பெண் பிள்ளையாக இருந்தாலும் பதின் வயதில் தடம் மாற முயற்சிக்கும்போது தேவையான அறிவுரைகளை பக்குவமாக எடுத்துக் கூற வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கடமை என்கின்றனர் மனோதத்துவ நிபுணர்கள். அது தவறும்போதே இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறுகின்றன.