​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மனைவியுடன் தகாத உறவு.. பேருந்து நடத்துநர் கொலை...2 பேர் நீதிமன்றத்தில் சரண்

Published : Jul 07, 2019 5:19 PM



மனைவியுடன் தகாத உறவு.. பேருந்து நடத்துநர் கொலை...2 பேர் நீதிமன்றத்தில் சரண்

Jul 07, 2019 5:19 PM

டலூர் அருகே தனியார் பேருந்து நடத்துநரை வெட்டிக் கொலை செய்த இரண்டு பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். தனது மனைவியுடன் தகாத உறவு வைத்திருந்த நடத்துநரை, தம்பியுடன் சேர்ந்து பள்ளி ஆசிரியர் வெட்டிக் கொலை செய்தது அம்பலமாகி உள்ளது.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே கருமாச்சிப்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜமுருகன். குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியார் பள்ளியின் ஆசிரியரான இவருக்கு ரேவதி என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர்.

ரேவதியும் தனியார் பள்ளியின் ஆசிரியை ஆவார். அவர்களது வாழ்க்கை இனிமையாகச் சென்று கொண்டிருக்க அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்ற தனியார் பேருந்து நடத்துநரால், குடும்பத்தில் பூகம்பம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ராஜமுருகன் - கோவிந்தராஜ் இடையேயான நட்பால், ரேவதிக்கும் கோவிந்தராஜூக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் தகாத உறவாக மாறியதாக சொல்லப்படுகிறது.

இதை அறிந்த ராஜமுருகன், இருவரையும் கண்டித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் கடந்த 2ஆம் தேதி முதல் ரேவதியையும், கோவிந்தராஜையும் காணவில்லை என்று அவர்களது உறவினர்கள் சார்பில் குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

போலீசார் இருவரையும் தேடி வந்த நிலையில், சனிக்கிழமை அன்று காலை முதுநகர் மணக்குப்பம் அருகே அடையாளம் தெரியாத நபர் வெட்டிக் கொல்லப்பட்டு சடலமாகக் கிடப்பதாக முதுநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து அங்கு சென்று சடலத்தை மீட்டு விசாரணை நடத்திய முதுநகர் போலீசார், அது கோவிந்தராஜ் தான் என்பதை உறுதி செய்து கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணை ஒருபுறம் சென்று கொண்டிருக்க இந்தக் கொலை தொடர்பாக அன்றைய நாளே ராஜமுருகனும் அவரது தம்பி ராஜசிம்மனும், சிதம்பரம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் ரேவதியை கோவிந்தராஜ் அழைத்துக் கொண்டு சென்று தனியாக வாழ முயற்சித்ததே கொலைக்கு காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

ரேவதியை கோவிந்தராஜ் சென்னைக்கு அழைத்துச் சென்று விட்டதாகவும், இந்த தகவலை அறிந்து கொண்ட ராஜமுருகனும், ராஜ சிம்மனும் அவர்களை கண்டுபிடித்து மீண்டும் ஊருக்கு அழைத்து வந்ததாகவும் போலீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரேவதியை மட்டும் வீட்டிற்கு அனுப்பி வைத்த அந்த இருவரும், கோவிந்தராஜை, மணக்குப்பம் பகுதிக்கு அழைத்துச் சென்று வெட்டிக் கொலை செய்து விட்டனர் என்கிறனர் போலீசார். ராஜமுருகனும், ராஜசிம்மனும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.