​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாயமான விவகாரம் - முகிலனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

Published : Jul 07, 2019 2:43 PM

மாயமான விவகாரம் - முகிலனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை

Jul 07, 2019 2:43 PM

ந்திராவில் கண்டுபிடிக்கப்பட்ட சூழலியல் ஆர்வலர் முகிலனிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வீடியோ பதிவு வாக்குமூலம் எடுத்து வருகின்றனர். 

கடந்த பிப்ரவரி மாதம் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்த முகிலன் மாயமானார். தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் முகிலனை கண்டறிய காவல்துறையினருக்கு வலியுறுத்தினர்.

தமிழ்நாடு மாணவர் மற்றும் இளையோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் லயோலா மணி, இது தொடர்பாக எழும்பூர் ரயில்வே காவல்துறையினரிடம் புகார் அளித்தார். இந்நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

சி.பி.சி.ஐ.டி போலீசார் முகிலனை கண்டறிய ரயில் நிலையங்களில் நோட்டிஸ் ஒட்டி பொதுமக்கள் உதவியை கோரினர். இந்த சூழலில் நேற்று ஆந்திர மாநிலம் திருப்பதி ரயில் நிலையத்தில் முகிலனை ரயில்வே காவல்துறையினர் அழைத்து செல்வதை கண்ட அவரது நண்பர் சண்முகம், முகிலனின் மனைவி பூங்கொடிக்கு தகவல் தெரிவித்தார்.

ஊடகங்களில் இந்த செய்தி வீடியோவுடன் வெளியானது. பின்னர் சி.பி.சி.ஐ.டி போலீசார் ஆந்திர ரயில்வே போலீசாரிடம் தகவல் கேட்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து, ரயில்வே போலீசார் முகிலனை ரயில் மூலம் காட்பாடிக்கு அழைத்து வந்து, தமிழ்நாடு சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் சென்னைக்கு அழைத்துவரப்பட்ட முகிலனிடம், கடந்த 140 நாட்களாக எங்கே இருந்தார்? எப்படி வாழ்ந்தார்? யார் யாரை சந்தித்தார்? என்பன உள்ளிட்ட விவரங்களை கேட்டு அவரது வாக்குமூலத்தை சிபிசிஐடி போலீசார் வீடியோ பதிவு செய்தனர்.

ஆட்கொணர்வு மனு மீதான சட்ட ரீதியான நடவடிக்கைகளை சிபிசிஐடி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவ பரிசோதனையில் தனது கணுக்காலில் நாய் கடித்ததாக முகிலன் தெரிவித்ததை அடுத்து அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. மேலும், முகிலனுக்கு சர்க்கரை நோய் அதிகரித்து இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி ஷங்கர் மற்றும் எஸ்.பி. மல்லிகா விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குளித்தலையில், முகிலன் மீது, பெண் ஒருவர் கொடுத்த பாலியல் பலாத்கார வழக்கு கடந்த மே மாதம் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. மாயமான விவகாரம் தொடர்பான விசாரணை முடிவுற்று, பாலியல் பலாத்கார புகார் பற்றி சிபிசிஐடி போலீசார் விசாரித்தால், அதில், முகிலன் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.